சந்திரமுகி 2வில் ஜோதிகா?

0
186

சந்திரமுகி 2வில் ஜோதிகா?

மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் உருவான ‘மணிசித்திரத்தாழு’ எனும் படத்தை தொலைக்காட்சி ஒளிபரப்பில் கண்ட பி.வாசு அதன் உரிமையை சில லட்சங்கள் கொடுத்து வாங்கினார். பின்னர் அதில் முக்கியமான பகுதிகளை வைத்துக் கொண்டு திரைக்கதையை மாற்றியமைத்து ‘ஆப்தமித்ரா’ என்ற பெயரில் கன்னட சூப்பர்ஸ்டாரான விஷ்ணு வரதனை வைத்து இயக்கினார். பாபா படத்தின் தோல்வியால் மிகவும் துவண்டு போயிருந்த ரஜினி, இனி திரைப்படங்களில் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்த சமயம் அது. வழக்கமாக ஓய்வெடுக்கப் பெங்களூர் செல்லும் ரஜினி, அங்கு மாறு வேடத்தில் உலா வருவது வழக்கம். அப்படி அவர் மாறு வேடமணிந்து திரையங்கிற்க்கு சென்று ‘ஆப்தமித்ரா’ படத்தினை பார்த்து ரசித்துள்ளார். அவருக்கு அந்த படம் மிகவும் பிடித்துப் போக உடனடியாக பி.வாசுவை தொடர்பு கொண்டவர் தனக்கு அந்த அப்படத்தினை தமிழில் நடிக்க தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் ‘மன்னன்’ உள்ளிட்ட படங்களில் ரஜினி நடித்திருந்தாலும் நீண்ட வருடங்களாக தங்கள் நிறுவனத்திற்கு அவர் படம் நடித்துத் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்துள்ளனர் அதன் நிர்வாகிகள். ரஜினியுடன் ‘படையப்பா’ படத்தில் நடித்த போது சிவாஜியும் ரஜினியிடம் தனது நிறுவனத்துப் படம் நடித்துத் தர கேட்கத் தான் நிச்சயம் நடித்துத் தருவதாகக் கூறியுள்ளார். 2001ம் ஆண்டு சிவாஜி உடல்நல குறைவால் மறைந்து போனார். அப்பொழுது ரஜினி ‘பாபா’ படத்தின் நடித்துக் கொண்டிருந்தார். இதனால் தான் அடுத்த படம் நடிக்க வேண்டு என முடிவு செய்தவுடன் சிவாஜி புரொடக்ஷன்சை தொடர்பு கொண்டு தேதிகளைக் கொடுத்தார்.

கன்னடத்தில் ‘ஆப்தமித்ரா’ படத்திற்காக பி.வாசு திரைக்கதையை மாற்றியிருந்தாலும் தமிழுக்காக மீண்டும் திரைகதைய மாற்றி எழுதிய பி.வாசுவிடம், கதையில் நிறைய மாற்றங்கள் செய்தார். வடிவேலுவின் கதாபாத்திரம், வேட்டையன் வேடம் போன்றவை கன்னடத்தில் கிடையாது. முதலில் சந்திரமுகி வேடத்திற்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் சிம்ரன். அவர் ஒப்பந்தமான சில நாட்களிலேயே கர்ப்பம் திரிந்திருந்ததால், படத்திலிருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து ஒப்பந்தம் செய்யப்பட்டவர் தான் ஜோதிகா.

இப்படி உருவான இப்படம் மாபெரும் வெற்றி பெற்றதையடுத்து கடந்த சில வருடங்களாகவே சந்திரமுகி இரண்டாம் பாகத்தை இயக்க முயன்று வந்தார். சந்திரமுகி 2வில் நடிக்க ரஜினியை தொடர்பு கொண்டவர், அவர் மறுத்த பின்னர் தற்போது ராகவா லாரன்சை நடிக்க வைக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் திரைக்கதை வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் இடையே ஆன மோதலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இதனால் சந்திரமுகி கதாபாத்திரத்தை ஜோதிகாவே ஏற்று நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய பி.வாசு அவரிடம் பேச்சுவார்த்தையைத் துவக்கியுள்ளாராம். ஜோதிகா இதில் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.