Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பள்ளிகள் மூடப்படுமா : மாணவர்களுக்கு தொடரும் கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கோயம்பத்தூர், புதுக்கோட்டை, கரூர், திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் 4 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரண மாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த 1-ஆம் தேதி கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. இந்நிலையில், கோவை சூலூரை அடுத்த சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இவர்கள் தவிர திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி, மன்னார்குடி அருகே முன்னாவல்கோட்டை அரசுப் பள்ளி மாணவர், திருத்துறைப் பூண்டி அருகே தலைக்காடு அரசுப் பள்ளி மாணவர், வலங்கைமான் அருகே அரித் துவாரமங்கலம் அரசுப் பள்ளி மாணவர் என 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது.

பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் 2 பேருக்கும் புரவிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி ஒருவருக்கும் பணிக்கம்பட்டி தனியார் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

கரூர் மாவட்டம் பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு கடந்த 3-ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதே போல் அரசு மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஆசிரியையின் மகனுக்கும் தொற்று உறுதியானது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதை யடுத்து, அந்த ஆசிரியரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 50 பேருக்கு பரிசோதனை செய்ததில், ஆசிரியரின் 8 மாத குழந்தை உட்பட குடும்பத்தினர் 5 பேருக்கு தொற்று இருந்தது. இதே பள்ளியைச் சேர்ந்த மேலும் 2 ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி நேற்று மூடப்பட்டது.

தமிழகம் முழுவதும் இதேபோல் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் மூடப்படுமா அல்லது தொடர்ந்து இயக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Exit mobile version