நெல்லையில் மத்திய அரசு தமிழக மாநிலத்திற்கு அல்வா கொடுத்து வருவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணா அறிவாலய அல்வா வகைகள் என்ற ஒரு பதிவை தற்சமயம் வெளியிட்டுள்ளார்.
அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது நீங்கள் டெல்லிக்கு கூட்டணி சார்பாக சென்றீர்களே! தற்சமயம், நெல்லை சென்று பரப்புரையாற்ற உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அப்பதிவில், கல்வி கடன் தள்ளுபடி, பயிர் கடன் தள்ளுபடி, 5 சவரன் வரையிலான நகை கடன் தள்ளுபடி, சிலிண்டர் மானியம், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவது, டீசல் விலை குறைப்பு, நெல், கரும்பு ஆதரவு விலை அதிகரிப்பு, அரசு வேலை வாய்ப்பு, காலி பணியிடங்களை நிரப்புவது, பழைய ஓய்வூதிய திட்டம் இவை அனைத்தும் தமிழக மக்களுக்கு திமுக அரசு கொடுக்கும் அல்வா என்று பதிவிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில், கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு கண் துடைப்பிற்காக சிறிது அளவு பணத்தை மட்டும் தள்ளுபடி செய்து விட்டால் போதுமா! இதனை எதிர்த்து கேட்டாலும் உங்களுக்கு கோபம் வருகிறதா? என்று திமுக அரசை சாடியுள்ளார்.