Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்று கூடும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! நிர்மலா சீதாராமன் எடுக்கப்போகும் அதிரடி முடிவு?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது நாளைய தினம் 2022 2023 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் என்று சொல்லப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலுக்கு ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் அது தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன, உத்திரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு வாக்காளர்களை கவர்வதற்காக கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும், எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் 2025 ஆம் ஆண்டுக்குள் 375 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது. அதற்கான நிதி சீர்திருத்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று கருதப்படுகின்றது.

இதைத்தவிர கார்ப்பரேட் நிறுவனங்களும், வருமான வரி செலுத்தும் தனிநபர்களும், சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உதாரணமாக, 80சி பிரிவின்கீழ் வருடத்திற்கு 1.5 லட்சம் வரையிலான சேமிப்பு வரி கழிவு வழங்கப்படுகிறது. இந்த தொகையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று மாதச் சம்பளதாரர்கள் விரும்புகிறார்கள்.

ரூபாய் 15 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்திற்கு அதிகபட்சமாக 30 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது, இந்த 15 லட்சம் என்ற வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும், எதிர்பார்த்திருக்கிறார்கள். பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சி ஆதிக்கம் பெருகி வருகிறது. இதன் காரணமாக, அதற்கு வரி விதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

கடந்த 2018ஆம் வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட மிக நீண்ட கால மூலதன ஆதாய வரி முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியர்கள் பட்டியலிட்ட பங்குகளின் விற்பனைக்கு மட்டும் நீண்டகால ஆதாய வரியிலிருந்து விலக்கு வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

நோய்தொற்று காலத்தில் ஊழியர்களுக்கும், சமுதாயத்திற்கும், செலவிட்ட தொகைக்கு வரிச்சலுகை வழங்க வேண்டும் என கார்ப்பரேட் நிறுவனங்கள் விருப்பம் கொண்டிருக்கின்றன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டிருக்கின்ற நிறுவனங்களுக்கு கம்பெனி வரி 15 சதவீதம் அல்லது அதற்கு கீழாக குறைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

மறைமுக வரிகளை பொறுத்தவரையில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தி சாதனங்கள் மற்றும் அவை தொடர்பான உதிரி பாகங்களுக்கு சுங்கவரி குறைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. செமி கண்டக்டர்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதத்தில் அதற்கும் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

தோல் லேமினேட் உள்ளிட்ட துறைகளுக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையும் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் அதற்கான வாய்ப்பிருக்கிறது. சென்ற பட்ஜெட்டில் 400 பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு வழங்கப்பட்ட சூழ்நிலையில், இந்த பட்ஜெட்டில் மேலும் பல பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தவிர சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக பணப்புழக்கத்தையும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் செய்ய போதுமான சூழ்நிலையையும், ஏற்படுத்தக்கூடிய அறிவிப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Exit mobile version