Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரவுடிகளை மிஞ்சிய காவல்துறையினர்! குண்டர்களை வைத்து மதுபான பாரை சூறையாடிய 2 காவல்துறையினர்!

காவல்துறையினர் என்றால் எப்போதும் பொதுமக்களுக்கு பாதுகாப்பளிப்பதும், சட்டவிரோதமாக செயல்படுபவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை கைது செய்வதும், தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பதும் தான் அவர்களுடைய வேலையாக இருந்து வருகிறது.

மேலும் கொலை, கொள்ளை, உள்ளிட்ட சட்டவிரோத சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது தான் காவல்துறையினரின் முதன்மை பணி.

அதோடு சாதாரண பொதுமக்களுக்கு சிறந்த நண்பனாக விளங்க வேண்டும் என்பதே காவல்துறையினர் நோக்கமாக இருந்து வருகிறது.இந்த சூழ்நிலையில், 20க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஏவிவிட்டு மதுபான கடைகளை 2 காவல்துறை அதிகாரிகள் சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி பெங்களூர் சாலையில், கிருஷ்ணாபுரம் அருகே காவல் துறைக்கு சொந்தமான மதுபான குடோன் ஒன்று இருந்திருக்கிறது. அதன் கண்காணிப்பாளராக மதனப்பள்ளி அடுத்திருக்கின்ற ராஜீவ் நகரில் வசித்து வரும் காவல்துறை ஆய்வாளர் ஜவஹர் பாபு பணி புரிந்து வந்தார். அவருடன் அதே குடோனில் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் பணிபுரிந்து வந்தார்.

மதனப்பள்ளி அவென்யூ சாலையில் மதுபானகடை பாருடன் கூடிய ஒரு ஓட்டல் இருக்கிறது. அதன் உரிமையாளர் சென்ற 3 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாடு சென்றதால் அந்த பாரை அந்த பகுதியை சேர்ந்த சோமு என்பவர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் எஸ் பி ஐ காலனியை சேர்ந்த வெங்கட சிவபிரசாத் என்பவருடன் சேர்ந்து நடத்தி வந்தார்.

மதுபான பாருக்குள் தேவையான பொருட்களை கொண்டு வருவதில் வெங்கட சிவபிரசாத், காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு இடையே தகராறு உண்டானது. இதுதொடர்பாக வெங்கட சிவபிரசாத் பார் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

அதனடிப்படையில் பார் உரிமையாளர் காவல்துறை ஆணையரிடம் புகார் வழங்கினார், ஆனாலும் பொருட்களைக் கொண்டு வராமல் இருந்ததால் மதுபான பார்களை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறை உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் ஒன்றாக சேர்ந்து கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி தனக்கு தெரிந்த 30 ரவுடிகளுடன் வந்து வெங்கட சிவபிரசாத் தாக்கியிருக்கிறார்கள். அதோடு மதுபான பாரையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் .

இதுதொடர்பாக வெங்கடேஷ் பிரசாத் வழங்கிய புகாரின் அடிப்படையில் மதனப்பள்ளி 2 டவுன் காவல்துறையை சார்ந்தவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தார்கள். இதுகுறித்து விசாரணை நடத்த சித்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதனப்பள்ளி காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், காவல்துறை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து ரவுடிகளை ஏவி விட்டு வெங்கட சிவபிரசாத்தை தாக்கியது தெரியவந்திருக்கிறது.

இதனை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் ஜவஹர் பாபு, காவல்துறை உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அவர்களை மதனபள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன்பிறகு சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 30 ரவுடிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது மிக விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Exit mobile version