சீன நிறுவனத்தை சார்ந்த ‘டிக்-டாக்’ என்னும் செயலி கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி சுமார் 80 கோடி பேர் ‘டிக் டாக்’ செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
‘டிக்-டாக்’ செயலியால் பல விபரீதங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் அதனை தடை செய்ய பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘ஃபைசல் சித்திக்’ என்பவரது ‘டிக்-டாக்’ பக்கத்தை சுமார் 13.4 மில்லியன் பயனர்கள் பின் தொடர்கின்றனர். அவர் டிக்-டாக் பக்கத்தில் பெண்கள் மீது அமிலம் வீசுவதை ஊக்குவிக்கும் வகையில் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளார் என குற்றம் எழுந்தது. அந்த காணொளியும் வைரலாக பரவியது.
அவருடைய காணொளியை டிவிட்டரில் பதிவிட்டு குறிப்பிட்ட பலரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கருத்தை #BanTiktok என்ற ஹேஷ்டக்கில் பதிவு செய்து ட்ரெட்ன் செய்து வருகின்றனர்.
ஒரு பெண்ணின் மீது அமிலம் வீசுவதாகச் சித்தரிக்கும் காணொளியை எப்படி நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடிகிறது என்ற கேள்வியையும் பலரும் எழுப்பியுள்ளனர். பலரும் அவருடைய செயலை கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனையடுத்து தேசிய மகளிர் ஆணையம், மராட்டிய மாநில காவல் துறை ஆணையருக்கும், டிக்டாக் நிறுவனத்திற்கும் கடிதம் எழுதியுள்ளது. இதனையடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட காணொளி டிக்டாக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே ஃபைசல் சித்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “யாரையும் காயப்படுத்துவது என்னுடைய நோக்கம் இல்லை. எனது பொறுப்பை நான் உணர்ந்து, காணொளியால் காயம்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து சமுதாய சீர்கேட்டை ஊக்குவிக்கும் விதமாக ‘டிக்-டாக்’ காணொளிகள் இருப்பதால், இந்தியாவில் நிரந்தரமாக ‘டிக்-டாக்’ தடை செய்யப்பட வேண்டும் என்ற கோஷம் அதிகரித்துள்ளது.