பேரணியில் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷம்: சுயரூபத்தை காட்டிய பெண்! லாடம் கட்டிய காவல் துறை
சமீபத்தில் பாஜக தலைமையிலான மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
இதைப்போல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வருகின்றன. அதன்படி இந்த சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆட்சி செய்யும் 5 மாநில சட்டசபைகளில் இந்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
மேலும் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணிகளும், போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு நகரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி ஒன்று நடந்தது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரான ஓவைசி கலந்து கொண்டார்.
இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் அமுல்யா என்ற இளம்பெண் திடீரென்று பாகிஸ்தானிற்கு ஆதரவாக ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கோஷம் எழுப்பினார். இது பேரணியில் கலந்து கொண்டவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து கோஷமிட்ட அவரை தடுத்து நிறுத்திய ஓவைசி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதனையடுத்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட அந்த இளம்பெண் மீது 124ஏ பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உள்ளனர். மேலும் இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்பின் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருபவர்களை பாகிஸ்தானிற்கு ஆதரவாக பாஜகவினர் சித்தரித்து வரும் நிலையில் தற்போது இந்த பெண் பாகிஸ்தானிற்கு ஆதரவாக கோஷமிட்டது அவர்களுடைய சுயரூபம் வெளிப்பட்டதாகவே விமர்சிக்கபடுகிறது.