உலக பார்வை தினம் 2023!!! 2 மணிநேரம் கண்களை இமைக்காமல் சாதனை படைத்த மாணவி!!!
உலக பார்வை தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது மாணவி ஒருவர் 2 மணி நேரம் கண்களை இமைக்காமல் இருந்து சாதனை படைத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தின் நகர்மன்ற தலைவியாக இருக்கும் பவித்ரா ஷியாம் அவர்களின் 10 வயதான மகள் அனிஷ்கா அவர்களுக்கு உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்து வந்துள்ளது. இதையடுத்து உலக சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கடந்த மூன்று மாதங்களாக அய்யப்பன் என்ற பயிற்சியாளர் உதவியுடன் 1 மணி நேரம் 30 வினாடிகள் கண் இமைக்காமல் இருக்கும் சாதனைக்காக கடும் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
அதைத் தொடர்ந்து உலக பார்வை தினமான நேற்று(அக்டோபர்12) இரவு ராஜபாளையம் பெரிய சாவடியில் ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களின் அனுமதி பெற்ற அனிஷ்கா 2 மணி நேரம் வீடியோ ரெக்கார்டிங் மற்றும் கண்கானிப்புக்கு மத்தியில் கண் இமைக்கும் இருந்தார். இதையடுத்து இரண்டு மணி நேரம் கண் இமைக்காமல் இருந்த மாணவி அனிஷ்கா சாதனை படைத்து ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெற்றார்.
ஒரு மணி நேரம் 30 நொடிகள் கண் இமைக்காமல் இருக்க பயிற்சி பெற்ற அனிஷ்கா கண்களில் தண்ணீர் வந்தாலும் பரவாயில்லை என்று 2 மணி நேரம் முழுமையாக கண்களை இமைக்காமல் இருந்து உலக பார்வை தினத்தில் சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த அனிஷ்கா அவர்களுக்கு நண்பர்களும் பொது மக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
நம்மால் வெறும் 10 விநாடிகள் கூட கண்களை இமைக்காமல் இருக்க முடியாது. ஆனால் உலக பார்வை தினத்தில் இரண்டு மணிநேரம் வரை கண்களை இமைக்காமல் சாதனை படைத்த மாணவி அனிஷ்காவிற்கு வாழ்த்துக்கள்.