தலைவி சர்ச்சையும் சமாதானமும்! நடந்தது என்ன?

0
116

தலைவி சர்ச்சையும் சமாதானமும்! நடந்தது என்ன?

தலைவி படத்தில் வேண்டுமென்றே என் பெயரை நீக்கியுள்ளனர் என குற்றம் சாட்டிய எழுத்தாளர் அஜயன் பாலா ஒரே நாளில் இயக்குனர் விஜய்யுடன் சமாதானம் செய்து கொண்டுள்ளார்.

எழுத்தாளர் அஜயன் பாலா ஏ எல் விஜய் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான தலைவி படத்தின் கதை இலாகாவில் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான படத்தின் போஸ்டரில் அவரது பெயர் நீக்கப்படட்து தொடர்பாகா சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்தார்.

அதில் “சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும் தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்கவே முடியவில்லை. இத்தனைக்கும் நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக்கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து கோர்ட் வழக்குகளில் ஆதராமாக பயன்படுத்திக்கொண்டு வழக்கில் வெற்றி பெற்ற பின் என் பெயரை சுத்தமாக நீக்கிவிட்டார்கள்.

திரைக்கதையில் வணிக நோக்கில் உண்மைக்கு புறம்பாக மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் காட்சிகளை நான் நீக்கும்படி கோரிக்கை வைத்ததுதான் நான் அவமானப்படுத்தப்பட காரணம். பத்தாண்டு நட்புக்காக இயக்குனர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஆய்வு எழுத்து தொடர்ந்து பல்வேறு கட்டங்களில் திரைக்கதை விவாதம் என ஒன்றரை வருட உழைப்புக்கு கிடைத்த பலன் முதுகு குத்தல் தான்.

இத்தனைக்கும் முந்தின நாள் கூட பேசினேன். அப்போதுகூட இது பற்றி வாய் திறக்காத நண்பர் விஜய், அடுத்த நாள் எனக்கு கிடைக்கப்போகும் அவமானத்தை எண்னி அகமகிழ்ந்திருப்பார் போல, இப்படி எழுதியதால் எனக்கு முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கியை கொடுக்க மாட்டர்கள் . நட்பிற்காகக்கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரிய வேண்டாம். இதுவே சக எழுத்தாளர்களுக்கு இதன் மூலம் நான் கேட்டுக்கொள்ளும் கோரிக்கை”, என தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கினார்.

இதனிடையே நேற்று மாலை தனது பதிவு நீக்கத்துக்கு விளக்கமளிக்கும் விதமாக ‘இன்று காலை தலைவி பட பிரச்னை தொடர்பாக முகநூலில் இட்ட பதிவுக்கு பலரும் ஆதரவும் வருத்தமும் தெரிவித்தனர். தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்து, நாளை நேரில் பேசித் தீர்க்க சென்னை வருவதாக உறுதி கூறியதால் பதிவை நீக்கியுள்ளேன். நாளை, சந்திப்புக்குபின் தொடர்புகொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் இன்று காலை மீண்டும் ‘நேற்று இரவு நண்பரும் இயக்குனருமான விஜய் இரவு பத்துமணிக்கு வீட்டுக்கு வந்து உதவி இயக்குனரின் கவனக்குறைவால் நடந்துவிட்ட பிசகுக்கு வருத்தம் தெரிவித்தார். சரியான அங்கீகாரம் இடம்பெற்ற திருத்தப்பட்ட விளம்பரத்தை காண்பித்தார். இன்று ஹைதராபாத்திலிருந்து வரவிருக்கும் தயாரிப்பாளர் விஷ்ணு வுடன் நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தை மூலம் சம்பளப்ரச்னைகள் முடிவை எட்டும் என நம்புகிறேன். இவ்விவரம் தொடர்பாக எனக்கு உடன் நின்ற ஊடக.இதழியல் முகநூல் நண்பர்களுக்கு இதயம் நெகிழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.’ என சமாதானமாகியுள்ளார். இதையடுத்து பலரும் அவரது நியாயமான கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி என இதை பாராட்டு வருகின்றனர்.