ஒரே ஒரு டேக்கில் என்னை சிவாஜி யார்ன்னு கண்டுபிடிச்சுட்டாரு.. – மனம் திறந்த பார்த்திபன்!

0
94
#image_title

ஒரே ஒரு டேக்கில் என்னை சிவாஜி யார்ன்னு கண்டுபிடிச்சுட்டாரு… – மனம் திறந்த பார்த்திபன்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் பார்த்திபன். இவர் சினிமாவில் நடிகராவதற்கு முன் இயக்குநர் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

இதனையடுத்து, சினிமாவில் பாக்கியராஜ் இயக்கிய ‘தாவணி கனவுகள்’ உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

இதன் பிறகு நடிகராக மாறினார் பார்த்திபன். தமிழில் 1989ம் ஆண்டு முதல்முறையாக ‘புதிய பாதை’ என்ற படத்தில் நடித்தார். நடித்த முதல் படமே இவருக்கு தேசிய விருதை கொடுத்தது. இதனையடுத்து, ‘பொண்டாட்டி தேவை’, ‘தாலாட்டு படவா’, ‘எங்கள் சாமி அய்யப்பன்’, ‘தையல்காரன்’, ‘உன்னை வாழ்த்தி பாடுகிறேன்’, ‘சுகமான சுமைகள்’, ‘உள்ளே வெளியே’ உட்பட பல படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். இவருடைய சொந்த பணத்தில் ‘சுகமான சுமைகள்’, ‘குடைக்குள் மழை’, ‘ஒத்த செருப்பு’, ‘இரவின் நிழல்’ ஆகியபடங்களை எடுத்துள்ளார்.

சமீபத்தில் ஒரு சேனலுக்கு நடிகர் பார்த்திபன் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசுகையில், ‘தாவணி கனவுகள்’ படத்தில் நான் நடித்த முதல் காட்சியே சிவாஜி சாருடன்தான். பெரிய வசனத்தை எனக்கு கொடுத்தாங்க. படப்பிடிப்பில் சிவாஜி சார் வாயில் ரத்த வாந்தியெல்லாம் எடுக்கும் காட்சி அது. இந்த காட்சியை படமாக்குவதற்கு முன்பே என்னை சிவாஜி சார் கூப்பிட்டார்.

இங்க பாருப்பா…. ‘நீ வசனத்தை சரியாக பேசி நடிக்காவிட்டால் நான் திரும்ப ரத்த வாந்தி எடுக்கணும்.. இப்ப போட்டுருக்க டிரெஸ்ஸ காய வச்சி மறுபடியும் இந்த காட்சியை எடுக்க 3 மணி நேரமாகும். உன் டைரக்டருதான் இதுக்கு தயாரிப்பாளர் பாத்துக்க’ என்றார்.

இதை மனதில் வைத்து, நான் ஒரே டேக்கில் சரியாக நடித்துட்டேன். படப்பிடிப்பு முடிந்ததும் என்னை சிவாஜி சார் பார்த்து, ‘நாடக அனுபவமா?’ என்று கேட்டார். ஆமாம் சார் என்று தலையாட்டினேன். ‘அதான பார்த்தேன் அப்படி இல்லனா இந்த காட்சியை உன்னாலே ஒரே டேக்ல பேசி நடிக்க முடியாதே என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தையே எனக்கு பெரிய பாராட்டாக இருந்தது. என்றார்.