காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

0
157
Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

காதலிக்க மறுத்த இளம்பெண் தலித் இளைஞரால் படுகொலை! நாடகக் காதல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்

 

காதலிக்க மறுத்ததற்காக இளம்பெண்னை கொடூரக் கொலை செய்த நாடகக் காதல்

கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதலிக்க மறுத்த காரணத்திற்காக இளம்பெண் ஒருவர் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நாடகக் காதல் கும்பலின் இத்தகைய அத்துமீறல்கள் அதிகரித்துக் கொண்டே செல்வதும், அடங்க மறுப்பதும் கண்டிக்கத்தக்கவை; இவை சமூக அமைதியை குலைக்கக்கூடியவை.

 

உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகள் சரஸ்வதி. வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவர் தம்மை காதலிக்க வேண்டும் என்று தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அதன்பிறகும் அவர்களின் தொல்லை தொடர்ந்திருக்கிறது. கடந்த 2ஆம் தேதி காலை சரஸ்வதி கழுத்து இறுக்கப்பட்ட நிலையில், வீட்டு வாசலில் பிணமாகக் கிடந்திருக்கிறார். கொலைக்கான காரணம் தெளிவாகத் தெரியாத நிலையில் மர்ம மரணம் என காவல்துறை வழக்குப் பதிவு செய்தனர். இப்போது முழு உண்மையும் வெளிவந்துள்ளது.

 

ஏப்ரல் 2ஆம் தேதி காலை சரஸ்வதியை அவரது வீட்டுக்கு அருகில் ரங்கசாமி வழிமறித்து தம்மை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளார். அவருடன் அவரது சகோதரர் கிருஷ்ணசாமி, நண்பர் ரவீந்திரன் ஆகியோரும் சரஸ்வதியை மிரட்டியுள்ளனர். ஆனால், அதை ஏற்காத சரஸ்வதி, ரங்கசாமியை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரங்கசாமி, கிருஷ்ணசாமி, ரவீந்தர் ஆகிய மூவரும் சரஸ்வதியின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்து, உடலை அவரது வீட்டு வாசல் முன் வீசி விட்டு தப்பிச் சென்று விட்டனர். காவல்துறை விசாரணையில் இந்த உண்மைகள் தெரியவந்ததையடுத்து அவர்கள் மூவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்திருக்கின்றனர்.

 

காதலிக்கவும், திருமணம் செய்யவும் மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்வதை விட மோசமான காட்டுமிராண்டித்தனம் இருக்க முடியாது. தமிழ் சமூகம் பெண்மையை கடவுளாக வணங்கக் கூடியதாகும். கண்ணகி, திரவுபதி, ஆண்டாள் ஆகியோரை நாம் கடவுளர்களாக போற்றி வணங்கி வருகிறோம். இத்தகைய சமூகத்தில் பிறந்த எவரும் காதலிக்க மறுத்ததற்காக ஒரு பெண்ணை படுகொலை செய்ய துணிய மாட்டார்கள். ஆனால், அண்மைக்காலமாக நாடகக் காதல் செய்யும் கும்பலின் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகும் இளைஞர்கள் தான் இத்தகையக் கொடூரங்களைச் செய்ய துணிகின்றனர். இத்தகைய செயல்கள் சமூக நல்லிணக்கத்தை குலைத்து விடக் கூடியவை.

 

இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும்; படித்த படிப்புக்கு ஏற்ற வேலைக்கு செல்ல வேண்டும்; குடும்பத்தினரைக் காப்பாற்றி கவுரவமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக சமூகத்தின் அடித்தட்டில் உள்ள பட்டியலின மக்கள் முன்னேற வேண்டும் என்பதால் அம்பேத்கர் பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அச்சமுதாயத் தலைவர்கள் முயல வேண்டும்; அதைக் கருத்தில் கொண்டு தான் விவேகானந்தர்களாக இருங்கள்…. இளைஞர்களை வீணடிப்பவர்களாக இருக்காதீர்கள் என்று பட்டியலின சமுதாயத் தலைவர்களுக்கும் அடிக்கடி அறிவுரை கூறி வருகிறேன்.

 

இளைஞர்களை நல்வழிப் படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் அம்பேத்கரும் கற்பி, ஒன்று சேர், புரட்சி செய் என்று கூறினார். ஆனால், பட்டியலினத் தலைவர்களில் ஒரு சிலர், தங்களை நம்பி வந்த இளைஞர்களை கொள்கை வழிப்படுத்துவதற்கு பதிலாக நாடகக் காதல் செய்ய ஊக்குவிப்பது தான் இந்த சீரழிவுகளுக்கும், அப்பாவி இளம் பெண்கள் படுகொலை செய்யப்படுவதற்கும் காரணம் ஆகும். இளைஞர்களை தவறாக வழிநடத்தும் கும்பல்களை சமூகங்கள் புறக்கணிப்பது மட்டுமே இதற்கு தீர்வாகும்.

 

தேவியானந்தல் சரஸ்வதியை படுகொலை செய்தவர்களும் நாடகக் காதல் கும்பலைச் சேர்ந்தவர்கள் தான். இவர்கள் அந்தப் பகுதியில் வேறு பல சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சட்டப்படியாக அளிக்கப்படும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்; அதுமட்டுமின்றி இத்தகைய குற்றங்கள் இனியும் நடக்காமல் தடுக்கும் அரணாக அமைய வேண்டும். அதற்கேற்ப ரங்கசாமி உள்ளிட்ட மூவர் மீதும் கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்வதுடன் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவும் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.