Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்!

உங்களின் இந்த செயல் பாராட்டத்தக்கது இந்தியாவை பாராட்டி நன்றி கூறிய பில்கேட்ஸ்!

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், காணொலிக்காட்சி வழியாக வட்டமேஜை மாநாடு ஒன்றை நடத்தியது. இந்திய அமெரிக்க கூட்டுறவை மேம்படுத்தும் வகையில், இரு நாடுகளின் முக்கிய பங்குதாரர்களை ஒருங்கிணைப்பதுதான் இந்த மாநாட்டின் நோக்கம் ஆகும்.

இதில் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவின் தடுப்பூசி தயாரிப்பு திறமைகளையும், உலகுக்கு மலிவு விலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கான நாட்டின் தடுப்பூசி உற்பத்தியாளர்களின் முயற்சிகளையும் பாராட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆண்டு இந்தியா 15 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை கிட்டத்தட்ட 100 நாடுகளுக்கு வழங்கி உள்ளது. இதற்காக, இந்த தருணத்தில் இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

கொரோனா பெருந்தொற்று நோய் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, கொரோனா நோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, எதிர்காலத்தில் ஏற்படுகிற தொற்று நோய்கள், தொற்று நோய்களாக மாறுவதற்கு முன்பாக அதைத் தடுக்க தயாராக இருக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பின் தீவிரம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் அதை சாதாரணமாக எண்ணி விட்டுவிட வேண்டாம். தற்போதைய சூழலில் அடுத்த தொற்று நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன.  எனவே இதுபோன்ற சூழலில் உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Exit mobile version