பயப்படாதீங்க புதின் நான் ஒன்னும் கடித்து விட மாட்டேன்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

0
128

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐ.நா. சபையின் வலியுருத்தலை ஏற்க மறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது திடீரென்று கடந்த 24ஆம் தேதி போர் தொடுத்தார்.

இந்த நிலையில், உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை இந்த போர் காரணமாக சந்தித்திருக்கிறது. மேலும் ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கிறது. தலைநகரிலுள்ள ஒரு நீர்மின் நிலையத்தையும் ரஷ்ய படைகள் கைப்பற்றி இருக்கின்றன.அதோடு கார்கீவ் போன்ற மிகப்பெரிய நகரங்களையும் அந்த படைகள் கைப்பற்றியுள்ளது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றன. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாற்றியபோது இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.

பேச்சு வார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்து உக்ரைனில் இருக்கக்கூடிய இந்திய மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாமல் அவர்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சம்மதம் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உக்ரைனில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர் நவீன் என்பவரை ரஷ்யப் படைகள் சுட்டுக்கொன்றது. இதன்காரணமாக, அதிர்ச்சியடைந்த இந்தியா இந்தியாவிலிருக்கும் உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதரகங்களுக்கு சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகின்றது இருதரப்பு மோதலில் பலர் பலியாகி இருக்கிறார்கள்.உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

உக்ரைன் தலைநகரை நோக்கி வருகை தரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் ரஷ்யப் படைகள் தங்களுடைய தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், போரை நிறுத்துவதற்காக நடத்தப்பட்ட 2 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி கண்டது சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து பொது மக்களை வெளியேற்ற இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதால் சண்டையின் தீவிரம் சற்றே குறையும் தன்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என்று உக்ரைன் அதிபர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கும், போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் என்னுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். இது ஒன்றுதான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழி. 30 மீட்டர் இடைவெளியில் நீங்கள் அமர்ந்திருக்கவில்லை நான் ஒன்றும் கடித்து விட மாட்டேன் நீங்கள் எதற்காக பயம் கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் ஜெலன்ஸ்கி.