திருவண்ணாமலையில் தனது ஆன்மிக பணியை துவங்கியவர் நித்யானந்தா. இவரை தேடி பக்தர்கள் பலரும் சென்றனர். வீட்டில் நடக்கும் பல நல்ல காரியங்களுக்கு இவரை அழைத்தார்கள். இதன் மூலம் அவருக்கு நல்ல வருமானம் வந்தது. அதன் மூலம் பெங்களூரில் ஆசிரமம் துவங்கினார் நித்யானந்தா. அங்கு அவருக்கென சீடர்கள் உருவானார்கள்.
திருமணமாகாத பல இளம்பெண்களும், ஆண்களும் கூட அவரிடம் தீட்சை பெற்று சாமியார்களாக மாறினார்கள். வெளிநாட்டை சேர்ந்த பலரும் கூட அவரின் ஆசிரமத்தில் சீடர்களாக மாறினார்கள். இதன் காரணமாக மக்களிடம் பிரபலமாக துவங்கினார் நித்யானந்தா. கதவை திற காற்று வரட்டும் என ஆனந்த விகடனில் கூட இவரின் ஆன்மீக போதனைகள் வார வாரம் வெளிவந்தது.
நடிகை ரஞ்சிதாவையும் இவரையும் இணைத்து ஒரு வீடியோவும் சன் டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை நித்யானந்தாவை பின்பற்றுபவர்கள் தவிர மற்ற எல்லோரும் நம்பினார்கள். நித்யானந்தா மீது பல வழக்குகளும் தொடரப்பட்டது. திடீரென ஒரு நாள் இந்தியாவிலிருந்து வெளியேறிய நித்யானந்தா ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாஷ் என பெயர் வைத்து அதுவே தனது நாடு எனவும் அறிவித்தார். அங்கிருந்து அவர் சீடர்களிடம் பேசும் வீடியோக்கள் அடிக்கடி யுடியூப்பில் பதிவேற்றப்படும்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நித்யானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் இந்த தகவலை வீடியோ மூலம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். கடந்த 24 வருடங்களாக தொடர்ந்து ஆன்மீக பிரசங்க செய்து வந்த சாமி இந்து தர்மத்தையும், சமாதானத்தையும் காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்திருக்கிறார்’ என வீடியோ காலில் அவர் பேசியிருக்கிறர். இது நித்யானந்தாவை பின்பற்றுபவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதுபற்றி கைலாசா நாட்டில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமம் எந்த விளக்கும் கொடுக்கவில்லை.