தனியார் நிறுவனத்தில் 5 கோடி ரூபாய் மோசடி!! போலீசார் அதிரடி நடவடிக்கை!!
சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் தான் பிலிப்ஸ் ஜி.பி.எஸ். எல்.எல்.பி. இதில் ரமேஷ் சொக்கலிங்கம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தற்போது காவல் துறையில் புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில், தங்கள் நிறுவனத்தில் அகஸ்டின் சிரில் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கம்பெனியில் இருந்து ஐந்து கோடி ரூபாயை மோசடி செய்து விட்டார்.
இவருடன் சேர்ந்து இவரின் நண்பர் ராபின் கிறிஸ்டோபர் என்பவரும் ஏமாற்றி உள்ளார். எனவே, அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு இது குறித்து நடவடிக்கை எடுக்க கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் ரேவதி, கூடுதல் கமிஷனர் மகேஷ்வரியின் மேற்பார்வையில் விசாரணை நடத்தி வருகிறார். குற்றவாளிகளான அகஸ்டின் சிரில் மற்றும் ராபின் கிறிஸ்டோபர் பரமக்குடி என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள்.
எனவே, காவல் துறையினர் பரமக்குடி பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களின் இடத்தில் இருந்து ரூபாய் ஆறு லட்சம் பணம், ஒரு நான்கு சக்கர வாகனம், சுமார் 215 பவுன் கொண்ட தங்க நகைகள் என அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து இவர்கள் இருவரையும் தேடி பிடித்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இவர்களிடம் மோசடி செய்த ஐந்து கோடி ரூபாய் பணத்தை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.