ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம்!! சென்னை பெருநகர காவல்துறை அறிவிப்பு!!
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அமைந்துள்ள பகுதியில் காந்தி சிலைக்கு பின்பு 7.02 மீட்டர் அகலத்திலும், 480 மீட்டர் நீளத்திலும் மெட்ரோ ரயில் அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இதனால் அப்பகுதியில் ஜூலை ஆறாம் தேதி முதல் ஒரு ஆண்டிற்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே லூப் சாலை மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கம், மெரினா கடற்கரை இணைப்பு சாலை வழியாக போர் நினைவுச் சின்னம் நோக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாற்றாக வாகனங்கள் அனைத்தும் காமராஜர் சாலை வழியாக செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போல் போர் நினைவுச் சின்னம் வழியாக வாகனங்கள் மெரினாவின் இணைப்பு சாலை வழியாக கலங்கரை விளக்கம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை இணைப்பு சாலைக்கு செல்லும் வாகனங்கள், காந்தி சிலைக்கு பின்னே உள்ள தடை விதிக்கப்பட்ட பகுதி வரை செல்லலாம்.
அதற்கு பிறகு முன்னோக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போர் நினைவுச் சின்னம் பகுதியில் இருந்து மெரினா கடற்கரை இணைப்பு சாலைக்கு செல்லும் வாகனங்கள், காந்தி சிலைக்கு பின்னே உள்ள தடை விதிக்கப்பட்ட பகுதி வரை செல்லலாம்.
அதற்கு பிறகு முன்னோக்கி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்த மாற்றங்கள் இம்மாதம் ஆறாம் தேதி தொடங்கி ஒரு ஆண்டிற்கு இதேபோல் பின்பற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.