உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவ்வை விட இவர்தான் சிறப்பாக விளையாடுவார்- ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணியில் தற்போது உச்சபட்ச பார்மில் இருப்பவர் சூர்யகுமார் யாதவ்தான்.
இந்திய அணி உலகக்கோப்பை தொடருக்காக ஆஸ்திரேலியாவில் தயாராகி வருகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் கோலி, கே எல் ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான பார்மில் உள்ளனர். இதையடுத்து இவர்கள் மேல் பெரியளவில் நம்பிக்கை உள்ளது.
குறிப்பாக சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடி இருந்தார். இதனால் அவர் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களைக் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் முன்னாள் இந்திய வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா சூர்யகுமார் யாதவ்வை விட கே எல் ராகுல்தான் அதிக ரன்களைக் குவிப்பார் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் “2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்த வீரராக கேஎல் ராகுல் இருக்க முடியும். 20 ஓவர்கள் அனைத்தையும் பேட் செய்ய அவருக்கு வாய்ப்பு உள்ளது, மேலும் கடைசி வரை பேட் செய்யும் ஆட்டமும் அவருக்கு உள்ளது. பந்து மட்டையில் நன்றாக வரும் என்பதால் இந்த ஆடுகளங்கள் அவருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
அதிக விக்கெட் எடுக்கும் வீரராக அர்ஷ்தீப் சிங் இருப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் புதிய பந்திலும், டெத் ஓவரிலும் பந்து வீசப் போகிறார். மிடில் ஓவர்களிலும் அவருக்கு பந்து வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்கள் மற்றும் பெரிய மைதானங்களை அவர் விரும்புவார்” எனக் கூறியுள்ளார்.