பந்துவீச்சில் பார்ட்னர்ஷிப் அமைத்த ஆப்கானிஸ்தான்! 75 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!
இன்று(ஜூன்8) நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் நியூசிலாந்து அணியை 75 ரன்களுக்கு சுருட்டி ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் நாட்டில் கையனா பகுதியில் உள்ள புரொவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் தொடங்கிய வீரர்களாக களமிறங்கிய குர்பாஸ் மற்றும் இப்ரஹிம் ஜட்ரான் இருவரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். தொடர்ந்து விளையாடிய இப்ரஹிம் ஜட்ரான் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்ப குர்பாஸ் அரை சதம் அடித்து 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய அஸ்மத்துல்லா 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 159 ரன்கள் சேர்த்தது.
நியூசிலாந்து அணியில் ட்ரென்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் லாக்கி பெர்குசன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஃபிண் ஆளன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளிக்க மற்றொரு தொடக்க வீரர் டெவான் கான்வே 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது.
நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 59 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் நியூசிலாந்து அணியால் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது.
நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேட் ஹென்றி 12 ரன்கள் சேர்த்தார். பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப் வைப்பது போல ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் பார்ட்னர்ஷிப் வைத்து நியூசிலாந்து அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல ஃபசல்லாக் பரூக்கீ அவர்கள் 4 ஓவர் வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மொகம்மது நபி இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி 80 ரன்கள் சேர்த்த குர்பாஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆப்கானிஸ்கான் அணி இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. மேலும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.