Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!!

அதிரடியான பேட்டிங் மற்றும் அபாரமான பந்துவீச்சு!!! எளிமையாக நேபாளை வீழ்த்திய பாகிஸ்தான்!!!

நேற்று(ஆகஸ்ட்30) தொடங்கிய ஆசியக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாளம் அணியை பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் எளிமையாக வெற்றி பெற்றது.

நடப்பாண்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் நேற்று(ஆகஸ்ட்30) பாகிஸ்தானில் தொடங்கியது.

2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டி பாகிஸ்தானில் உள்ள முல்தான் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 124 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன் பிறகு ஜோடி சேர்ந்த பாபர் அசம் மற்றும் இப்டிகார் அஹமத் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 4 விக்கெட்டுகள் இழந்து தள்ளாடிய பாகிஸ்தான் அணியை 342 ரன்களுக்கு கொண்டு வந்தனர்

சிறப்பாக விளையாடிய பாபர் அசம் சதம் அடித்து 151 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் கடைசி பந்துவரை விளையாடிய இப்டிகார் அஹமத் சதம் அடித்து 109 ரன்கள் சேர்த்து நாட் அவுட்டில் இருந்தார். முகமது ரிஷ்வான் 44 ரன்கள் சேர்த்தனர். நேபாளம் அணியில் பந்துவீச்சில் சொம்பல் கமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சந்தீப் லமிச்சானே, கரண் கே.சி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 50 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 342 ரன்கள் சேர்த்தது. நேபாளம் அணிக்கு வெற்றி பெறுவதற்கு 343 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய நேபாளம் அணியின் பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நேபாளம் அணியில் அதிகபட்சமாக சொம்பல் கம்ல் 28 ரன்கள் சேர்த்தார். ஆரிப் செல்க் 26 ரன்கள் சேர்த்தார். மேலும் குல்சன் ஷா 13 ரன்கள் சேர்த்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நேபாளம் அணி 23.4 ஓவர்களில் பத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசி சதாப் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹரிஸ் ராவுப், ஷாகின் அப்ரிடி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நசீம் ஷா, முகமது நவாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த போட்டியில் சதம் அடித்து 151 ரன்கள் சேர்த்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிய பாபர் அசம் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஆசியக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இந்தாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

Exit mobile version