பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா! சூப்பர் ஓவரில் அபார வெற்றி! 

0
259
America shocked Pakistan! Huge win in Super Over!
பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா! சூப்பர் ஓவரில் அபார வெற்றி!
நடைபெற்று வரும்  டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் சுற்றில் அமெரிக்கா அணி சூப்பர் ஓவர் மூலமாக வெற்றி பெற்றுள்ளது.
நேற்று(ஜூன்6) அமெரிக்கா நாட்டில் டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் சுற்றில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.
அமெரிக்கா அணியின் பந்துவீச்சாளர்கள் சற்றும் எதிர்பார்க்காத விதமாக தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீசினர். 26 ரன்கள் எடுப்பதற்குள் பாகிஸ்தான் அணி ரிஷ்வான், உஸ்மான்கான், ஃபக்கர் ஜமான் ஆகியோர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் கேப்டன் பாபர் அசம் மற்றும் சதாப் கான் இருவரும் இணைந்து பொறுமையாக விளையாடி ரன்களை சேர்க்க தெடங்கினர்.
ஒரு புறம் ரன்களை சேர்க்கும் முயற்சியில் பாபர் அசம் ஆடிக் கொண்டிருக்க சதாப் கான் 40 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பாபர் அசம் 44 ரன்கள் சேர்த்தார். அமெரிக்கா அணியில் சிறப்பாக பந்துவீசிய கெஞ்சிகே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நெட்ரவால்கர் 2 விக்கெட்டுகளையும் அலி கான், ஜஸ்தீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையடுத்து 160 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய அமெரிக்கா அணியின் தொடக்க வீரர் மொனங்க் பட்டேல் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடத் தொடங்கினார். மறுபுறம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஸ்டீவன் டய்லர் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து சிறப்பாக விளையாடி மொனன்ங் பட்டேல் அரைசதம் அடித்தார்.
38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் மெனங்க் பட்டேல் ஆட்டமிழக்க அதன் பின்னர் களமிறங்கிய ஆரோன் ஜோனெஸ்,  ஆண்ட்ரிஸ் கோஸ் இருவரும் அமெரிக்க அணியை இலக்கை நோக்கி நகர சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கோஸ் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் தொடர்ந்து விளையாடிய ஆரோன் ஜோனெஸ் 36 ரன்கள் எடுத்த நிலையில் அமெரிக்க அணி 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுக்க போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.
சூப்பர் ஓவரில் அதிரடியாக விளையாடிய அமெரிக்க அணி 6 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து. இதையடுத்து 6 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 6 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி தன்னுடைய முதல் லீக் சுற்றில் தோல்வியை தழுவியது.
சிறப்பாக விளையாடி அமெரிக்க அணியின் வெற்றிக்கு உதவிய மொனங்க் பட்டேல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையடுத்து அமெரிக்க அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தன்னுடைய இரண்டாவது வெற்றியை பெற்று குரூப் ஏ பிரிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கின்றது.