பொதுவாக பூஜை அறை என்பதில் சில முக்கியமான பொருட்கள் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மங்களப் பொருட்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். சிலருக்கு பூஜை அறையில் வைக்க வேண்டிய மங்களப் பொருட்கள் என்பது எவை எவை என்ற சந்தேகங்கள் உண்டு. சிவனை வழிபடக்கூடிய வீட்டின் பூஜையறையில் வைக்கக்கூடிய மங்களப் பொருட்களுக்கு அஷ்டமங்கள பொருட்கள் என்று பெயர். அஷ்டமங்களப் பொருட்கள் என்பது எட்டு பொருட்களாகும்.
1. பூரண கும்பம்-தங்கம், வெள்ளி, செப்பு, மண் ஆகிய குடங்களில் நூல் சுற்றி, சந்தனம் குங்குமம் திலகம் இட்டு, அதில் வாசனை திரவியங்கள் போட்டு, நீர் நிரப்பி, மாவிலை தேங்காய் மற்றும் பூக்களால் அலங்கரித்து வைப்பதே பூரண கும்பம் ஆகும். இது மகாலட்சுமி வாசம் செய்யக்கூடிய இடமாகவும் கருதப்படுகிறது.
2. ஸ்வஸ்திக் சின்னம்-இன்பம், துன்பங்கள் சுழற்ச்சியாக வரும் என்பதை கூறும் வடிவம். துன்பத்தை நீக்கி இன்பத்தை தரும் அம்பிகையின் சக்தியை பெற்று தரக்கூடிய மற்றும் ஈர்க்கும் வடிவமாக இது திகழ்கிறது.
3. வட்ட கண்ணாடி-நம்மை நமக்கே காட்டுவது தான் கண்ணாடி. நாமே பிரம்மம் என்பதை உணர்ந்து விட்டோமானால், எதன் மீதும் நாம் நமது கவனத்தை செலுத்தாமல், பர பிரம்மத்தின் மீது நமது கவனத்தை செலுத்துவோம் என்பதை காட்டுவதற்கு தான் இந்த கண்ணாடி.
4. தீபம்-மகாலட்சுமியின் உருவம் தான் இந்த தீபம். இருளை விரட்டி ஒளியை தரும். மெய் ஞானத்தை நமக்கு தரக்கூடியதும் இந்த தீபம் தான். ஞான அறிவை நாம் பெற்றுவிட்டால் எல்லா நலனும் நம்மை தேடி வரும்.
5. குங்குமச் சிமிழ்-இது பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. பிறர் நம்மை வசியம் செய்ய முடியாத அளவிற்கு நம்மை பாதுகாக்கும் திறன் படைத்தது இந்த குங்குமம். நமது வீட்டிற்கு வரக்கூடிய பெண்களுக்கு குங்குமம் தந்து அனுப்பினால் நமது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
6. சந்தன கிண்ணம்- சந்தனத்தில் மகாலட்சுமி வாசம் செய்கின்றார். சந்தனத்தை பூசும் பொழுது எப்படி நமக்கு குளுமை கிடைக்கிறதோ அதுபோல குளுமையான இனிமையான வாழ்க்கையை தரக்கூடியது இந்த சந்தனம்.
7. சங்கு-வீட்டின் நிலை வாசலிலும் இந்த சங்கை பதிப்பர். வலம்புரி இளம்புரி என எதுவாக இருந்தாலும் வெண்மை நிறம் கொண்டது. மகாலட்சுமி உடன் பாற்கடலில் பிறந்தது இந்த சங்கு. சங்கின் முழக்கத்தை கேட்டால் துர் சக்திகள் நம்மை அண்டாது.
8. வெற்றிலை பாக்கு-எவ்வித நிவேத பொருள் கிடைக்காவிட்டாலும், வெற்றிலை பாக்கு வைத்து இறைவனை வழிபட்டால் அந்த செயல் வெற்றி பெறும் என்பதற்காகவே இதற்கு வெற்றிலை என்று பெயர் வைத்தார்கள். எந்த மங்கள நிகழ்வானாலும் அதன் துவக்கத்தில் இந்த வெற்றிலை தான் இடம் பெறும். வெற்றிலையில் மகாலட்சுமியும் வாசம் செய்கிறாள்.
அஷ்ட மங்களப் பொருட்கள் என்பது பல மதங்களில் நம்பப்படுகின்ற, பின்பற்றப்படுகின்ற ஒரு பாரம்பரிய முறை ஆகும். இந்துக்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர் என இன்னும் பல மதத்தினர் பின்பற்றுகின்றனர்.
இவை அனைத்தும் பாரம்பரியமாக நமக்கு நம் முன்னோர்கள் சொன்னவைகள் ஆகும். இந்த மங்களப் பொருட்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பது மிகுந்த பலனைத் தரும்.