ஆட்டோ ஓட்டுனர் நலவாரிய சிறப்பு முகாம்!! தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!!
தஞ்சாவூர் மாவட்டத்தின் உதவி ஆய்வாளர் உமாமகேஸ்வரி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது,
தமிழக அமைப்பு சாரா ஓட்டுனர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனம் சரிபார்க்கும் தொழிலாளர்களின் நலவாரியம் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் துறையின் கீழ் நடைபெற்று வருகிறது.
இந்த நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு திருமணம், மகப்பேறு, கல்வி மற்றும் இயற்கை மரணம், விபத்து மரணம் முதலியவற்றுக்கு பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இதில் உறுப்பினராக இருக்கும் பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு புது ஆட்டோ வாங்க ஒரு லட்சம் ரூபாயை மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு இப்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் அமைப்புசாரா ஓட்டுனர்கள் அனைவருக்குமே கிடைக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் குறைந்து இருக்கக்கூடிய நலவாரிய பதிவை அதிகரிக்க தஞ்சை மாவட்டம் முழுவதும் இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதனைத்தொடர்ந்து கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியில் உள்ள தொழிலாளார் துணை ஆய்வாளர் அலுவலக வளாகத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் இதர வாகன பழுது பார்ப்பவர்களுக்கான நலவாரிய முகாம் வருகின்ற பதினைந்தாம் நடைபெற இருக்கிறது.
இதில் கலந்து கொள்ள தேவையான ஆவணங்களாக ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தையும் எடுத்து வர வேண்டும்.
எனவே, ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவரும் இந்த நலவாரிய முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்து தமிழக அரசின் நலத்திட்டங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.