இந்திய டெஸ்ட் அணிக்கு ஜஸ்ப்ரீத் பூம்ரா இன்று தலைமை தாங்கி வழிநடத்த உள்ளார்.
இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்க உள்ளது. இந்த போட்டி இன்று மதியம் இந்திய நேரப்படி 2 மணிக்கு தொடங்குகிறது.
கடந்த ஆண்டு நடந்த தொடருக்குப் பிறகு இரண்டு அணிகளிலும் தலைமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மாறியுள்ளன. இந்திய அணிக்கு புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், இங்கிலாந்து அணிக்கு பென் ஸ்டோக்ஸும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு நடக்க உள்ள போட்டி என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2-1 என்ற கணக்கில் இந்திய அணி இந்த தொடரில் முன்னிலை வகிக்கின்றது. இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக துணைக் கேப்டன் ஜஸ்ப்ரீத் பூம்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கபில்தேவுக்கு பிறகு இந்திய அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வேகப்பந்துவீச்சாளர் இந்திய அணியை வழிநடத்துகிறார்.
அதுபோலவே தோனி போல எந்த விதமான உள்ளூர் போட்டிகளிலும் தலைமை தாங்காமல் நேரடியாக இந்திய அணிக்கு தலைமை தாங்குகிறார் பூம்ரா. அவரைப் போலவே வெற்றிகரமான கேப்டனாக ஜொலிக்க வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர் ரசிகர்கள்.