தலைமை நீதிபதி குறித்து சர்ச்சையான பேச்சு!! எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது!!
நாட்டில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒரு பதிப்பாளர் தான் பத்ரி சேஷாத்ரி ஆவார். கும்பகோணத்தைச் சேர்ந்த இவர் எழுத்தாளரும், சமூக ஆர்வலராகவும் இருக்கிறார்.
மேலும், இவர் பாஜக ஆதரவாளராகவும், வலதுசாரி சிந்தனையாளராகவும், மற்றும் மேடைப்பேச்சுகளில் சிறந்து விளங்குபவரும் ஆவார். சமீபத்தில் இவர் மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை பற்றி அனைத்து தனியார் செய்தி நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்களிலும் பேட்டி கொடுத்து வந்தார்.
இந்த மணிப்பூர் கலவரம் பற்றி அவர் கூறியதாவது, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பெரிய..அது என்ன வார்த்தையை கூறுவது என்றே எனக்கு தெரியவில்லை.
உங்களால் முடியாது என்றால் எங்களிடம் விட்டுவிடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நம்முடைய உச்ச நீதிமன்ற நீதிபதியான சந்திரசூட் அவர்கள் கையில் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு மணிப்பூருக்கு செல்லுங்கள்.
அங்கே சென்று உங்களால் அமைதியை அங்கு நிலைநாட்ட முடியுமா என்று பாருங்கள். சம்மந்தமே இல்லாமல் ஏதாவது பேசுகிறீர்கள். நீதிமன்றம் என்பதனால் நீ அரசுக்குள் வந்து விட முடியுமா?
மத்திய அரசும், மணிப்பூர் அரசும் செய்து கொண்டிருப்பதில் என்ன குறை இருக்கிறது? இரண்டு சமூகத்தினர் அடித்துக் கொள்கிறார்கள். அது ஒரு மலை பகுதி.
அங்கே கொலை நடக்கத்தான் செய்யும். அவர்கள் எதற்காக சண்டையிட்டுக் கொள்கிறார்கள். சண்டைக்கு முன்பே உங்களால் முன்கூட்டியே தடுத்திருக்க முடியுமா? அது எல்லாம் மிகவும் சிரமம் என்று கூறி இருந்தார்.
இதனையடுத்து பத்ரி சேஷாத்ரி நீதிபதி குறித்து சர்ச்சையாக பேசியதால் இவர் மீது குன்னம் காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதனால் மூன்று சட்ட பிரிவு வழக்குகளின் கீழ் இன்று அதிகாலை இவர் கைது செய்யப்பட்டார்.