நமது வீடுகளில் நாம் தெரியாமல் செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளின் மூலம் நமது வீட்டிற்கு நாமாகவே வறுமையை தேடித் தருகிறோம். சில விஷயங்களை நாம் சரியாகத்தான் செய்கிறோம் என்று நினைத்து, தவறாக செய்து விடுவதனால் பல விதமான பாதிப்புகள் நமது குடும்பத்தில் ஏற்படுகிறது.
என்னதான் 500, 1000 என நோட்டு காசுகள் வந்தாலும், நமது வீட்டின் பூஜையறையில் சில்லறை காசுகள் தான் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த சில்லறை காசுகளுக்கு முன்பாக ஒரு கண்ணாடியை வைக்க வேண்டும் எனவும், அந்த கண்ணாடியில் அந்த காசுகளின் எதிரொளிப்பு பட வேண்டும் எனவும் நாம் அனைவரும் அறிந்திருப்போம். இதன் மூலம் நமது வீட்டில் இருக்கக்கூடிய பணமானது இரட்டிப்பாகும்.
ஆனால் பூஜை அறையில் நாம் வைக்கக்கூடிய சில்லறை காசுகளில் சில தவறுகளையும் நாம் செய்து வருகிறோம். அது என்ன என்பது குறித்து தற்போது காண்போம். அது என்ன தவறுகள் என்பதை தெரிந்து கொண்டு அதனை சரி செய்து கொள்ள பாருங்கள். இல்லை என்றால் துரதிஷ்டம் நமது வீட்டில் வந்து குடியேறும்.
1.பணம் என்பது ஒரே இடத்தில் இருக்கக்கூடியது அல்ல அதாவது ஒருவரின் கையில் இருந்து மற்றொருவரின் கைக்கு மாறிக்கொண்டே இருக்கும். அவ்வாறு இருக்கையில் நமது பூஜை அறையில் தட்டில் போட்டு வைத்துள்ள சில்லறை காசுகளை பல மாதங்களாகவோ அல்லது வருடங்களாகவோ அப்படியே வைத்திருப்போம். ஆனால் அவ்வாறு வைத்திருக்கக் கூடாது.
அதாவது நாம் வாரத்திற்கு ஒருமுறையாவது பூஜை அறையில் உள்ள விளக்குகளை சுத்தம் செய்வோம். அப்பொழுது இந்த காசுகள் வைக்கக்கூடிய தட்டத்தையும், காசுகளையும் தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, துடைத்து விட்டு வைக்க வேண்டும். அந்த காசுகளை அப்படியே தூசுகள் அண்டி போய் வைத்திருக்கக் கூடாது. அதேபோன்று செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறை பொருட்களை சுத்தம் செய்யக்கூடாது. மற்ற நாட்களில் செய்து கொள்ளலாம்.
2. ஏதேனும் ஒரு அவசர தேவை அல்லது யாருக்கேனும் ஒருவருக்கு சில்லறை கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், பூஜை அறையில் உள்ள இந்த சில்லறை காசுகளை எக்காரணத்தைக் கொண்டும் எடுக்கக் கூடாது. அதேபோன்று மூன்று மாதத்திற்கு ஒரு முறை அந்த சில்லறை காசுகளை நாம் தங்கம், வெள்ளி வாங்கும் பொழுதும், கோவிலுக்கு செல்லும் பொழுதும் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது கோவில்களில் உள்ள உண்டியல்களில் போட்டு விடலாம்.
3. குபேர பூஜை மற்றும் லட்சுமி பூஜை செய்யும் பொழுது 108 சில்லறை காசுகளைக் கொண்டு அர்ச்சனை செய்வார்கள். அப்பொழுது சிலர் பூஜை அறையில் உள்ள இந்த சில்லறை காசுகளையும் எடுத்து பயன்படுத்திக் கொள்வர். ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது.
ஏனென்றால் அந்த காசுகளை எடுத்து நமக்கு தேவையான பூஜைக்கு பயன்படுத்தி விட்டு, மீண்டும் அந்தத் தட்டில் சிலர் வைத்து விடுவார்கள். அவ்வாறு பயன்படுத்திவிட்டு மீண்டும் பூஜை அறையில் வைக்க கூடாது. எனவே தான் பூஜை அறையில் உள்ள தட்டிலிருந்து காசுகளை எடுக்கக் கூடாது.
ஒன்று அந்த தட்டில் உள்ள காசுகளை சுபச் செலவுகளுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம், அல்லது கோவில் உண்டியல்களில் போட்டு விடலாமே தவிர, பயன்படுத்திவிட்டு மீண்டும் பூஜை அறையில் வைக்கக்கூடாது.