இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் இதை கட்டாயம் தடை செய்ய வேண்டும்! மருத்துவர் வேண்டுகோள்

0
178
Dr Ramadoss asked to ban Online Game

இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டும் சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அனைத்துத் தரப்பினரும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத் தளங்கள் இளைஞர்களை அடிமையாக்கி அவர்களின் வாழ்க்கையில் பொருளாதாரத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அத்தளங்களை உடனடியாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், அவை மிகப்பெரிய சமூகச் சிக்கலை ஏற்படுத்திவிடும் ஆபத்து உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்து வீடுகளில் உள்ளனர். பணியில் இருக்கும் இளைஞர்களிலும் பெரும்பான்மையினர் வீடுகளில் இருந்தபடியே பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கும், கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பொழுதுபோக்குவதற்கு வழியில்லாத நிலையில், அவர்களை குறி வைத்து ஆன்லைன் சூதாட்டதளங்கள் படையெடுத்து வருகின்றன.

ஒவ்வொரு நாளும் காலையில் செல்பேசியை திறந்தவுடனேயே,‘‘ இன்றைய அறிமுக ஊக்கத்தொகையாக ரூ.10,000 + 2000 வழங்குகிறோம். அதைக் கொண்டு ஆன்லைன் ரம்மி ஆட்டத்தைத் தொடங்குங்கள். லட்சக்கணக்கில் வெல்லுங்கள்’’ என்ற செய்தி வருகிறது. வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் ஏற்பட்ட வெறுமை ஒருபுறம், ஆன்லைன் ரம்மி ஆடி லட்சக்கணக்கில் சம்பாதித்தால் அது வருமானம் இல்லாத காலத்தில் உதவியாக இருக்குமே என்ற ஆசை ஒருபுறம் என இரண்டும் சேர்த்து ஆன்லைன் ரம்மிக்கு இளைஞர்களை அடிமையாக்குகின்றன. அறிமுக ஊக்கத்தொகையாக ஆன்லைன் ரம்மி நிறுவனம் கொடுக்கும் பணம் சில நிமிடங்களில் கரைந்து விடும். அதன்பின் அந்த இளைஞர்கள் தங்களிடம் உள்ள சிறிய அளவு சேமிப்பைக் கொண்டு ஆன்லைன் ரம்மி எனும் சூதாட்டத்தைத் தொடருவார்கள். அடுத்த சில மணி நேரங்களில் அவர்களின் சேமிப்புகள் முழுவதுமாக கரைந்து விடும்.

அதற்கு அடுத்த நாட்களில் அந்த இளைஞர்களை எவரும் தூண்டத் தேவையில்லை. மாறாக, காலையில் எழுந்தவுடனேயே நண்பர்கள், உறவினர்கள் என தெரிந்தவர்களையெல்லாம் தொடர்பு கொண்டு, கடன் வாங்கிச் சூதாடுவார்கள்; எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் அதை முழுமையாக இழப்பர். காரணம்… ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களே அப்படித் தான் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி குடும்ப விசேஷங்களுக்காக சேமித்து வைத்த தொகை, தொழில் தொடங்குவதற்காக ஒதுக்கி வைத்த பணம் என லட்சக்கணக்கான தொகையை ஆன்லைனில் இழந்து விட்டு, அதிலிருந்து மீண்டு வர முடியாமலும், இழந்த பணத்தை மீட்க முடியாமலும் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை ஏராளம். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்த பலர், மனநலம் பாதித்து நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருப்பதும் உண்மையாகும்.

கணினி வசதி இருப்போர் மட்டும் தான் இணையதளங்களை பார்க்க முடியும் என்ற காலம் மாறி விட்டது. ஸ்மார்ட் தொலைபேசிகளின் வருகையால் செல்பேசியிலேயே இணையத்தை பயன்படுத்த முடியும் என்பதால் மிகவும் எளிதாக இந்த சூதாட்ட வலையில் விழுந்து விடும் ஆபத்து உள்ளது. சூதாட்டம் என்பது மது, புகையை விட மோசமான போதை; மீளமுடியா புதைமணல் என்பது உலகம் அறிந்த உண்மை. ஒருமுறை இப்புதைமணலில் சிக்கினால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்.

17 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் தலைவிரித்தாடிய பரிசுச்சீட்டு கலாச்சாரத்தால் லட்சக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன. பாட்டாளி மக்கள் கட்சி தான் தொடர்ச்சியான போராட்டங்களால் அந்தக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டியது. அதேபோல், இப்போது ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் இளைஞர் சமுதாயத்தை சீரழிவிலிருந்து காப்பாற்ற முடியாது.

சூதாட்டங்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போது, ‘‘ ஆன்லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை’’ என்று உச்சநீதிமன்றம் கூறி விட்டது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அனைத்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களும் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இளைஞர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றன.ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டம் உடனடியாக தடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிகமோசமான சமூக, பொருளாதார பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

எனவே, புதிய விதிகளை உருவாக்கியோ, ஏற்கெனவே உள்ள விதிகளின்படியோ ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.