அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வான எடப்பாடி பழனிசாமி! தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
அதிமுகவில் எம்ஜிஆருக்கு பிறகு பொது செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு அவரது மறைவிற்கு பிறகு, அதிமுகவில் இரட்டை தலைமை பதவி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் பதவிகளை வகித்து வந்தனர்.
இந்த நிலையில் இருவருக்கும் கட்சியை யார் தன் வசப்படுத்துவது என்பதில் ஒரு யுத்தம் நடைபெற்றது, இதில் எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும். தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்று திரட்டி கடந்த வருடம் ஜூலை மாதம் பதினொன்றாம் தேதி பொதுக்குழு கூட்டி அதிமுகவின் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி.
கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்ந்தெடுத்ததுமே பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கினார், எடப்பாடியின் இந்த முடிவுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் பன்னீர்செல்வம். இந்த வழக்கானது பல கட்டமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது, இதில் கடந்த வருடம் அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லுபடியாகும் என்று தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பின் மூலம் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது செல்லும் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது, பன்னீர் தரப்பு ஏற்படுத்திய தடைகளை தகர்த்தெறிந்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்றதன் மூலம், அதிமுகவின் அதிகாரமிக்க பதவியான பொது செயலாளர் பதவியை அடைகிறார் எடப்பாடி பழனிசாமி.
இன்று காலை நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கட்சியின் தலைமை அலுவலகத்தில், அதிமுகவின் முன்னணி நிர்வாகிகள் வெளியிட்டனர். பொது செயலாளராக அறிவிக்கப்பட்ட பின் முதலாவது அறிக்கையாக கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடியின் சொந்த ஊரான சேலத்தில் அதிமுகவினர் அண்ணா பூங்கா அருகே உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் , மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.