அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… நான்காம் நாளில் இங்கிலாந்து பவுலர்கள் ஆதிக்கம்

0
148

அடுத்தடுத்து விழுந்த விக்கெட்கள்… நான்காம் நாளில் இங்கிலாந்து பவுலர்கள் ஆதிக்கம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.

இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடக்கிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணி இரண்டாவது நாள் மதியம் வரை பேட் செய்த நிலையில் 416 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. சிறப்பாக விளையாடிய பண்ட் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினார்கள். கடைசி கட்டத்தில் களமிறங்கிய இந்திய அணி கேப்டன் ஜஸ்ப்ரீத் பூம்ரா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.

அதன் பின்னர் விளையாடிய இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ அபாரமாக விளையாடி சதமடித்தார். இதையடுத்து 122 ரன்கள் முன்னிலையோடு இந்திய அணி களமிறங்கியது. தொடக்க விக்கெட்களை சீக்கிரம் இழந்த நிலையில் ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா ஆகியோர் நிலைத்து நின்று ஆடி வருகின்றனர்.

தற்போது இந்தியா 125 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்களை இழந்துள்ளது. புஜாரா 50 ரன்களோடும், பண்ட் 30 ரன்களோடும் களத்தில் இருந்தனர். இந்திய அணி 257 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் அடுத்தடுத்து 3 விக்கெட்கள் விழுந்து இந்திய அணி தடுமாறி வருகிறது. புஜாரா 66 ரன்களிலும் பண்ட் 56 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தற்போது இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 205 ரன்கள் சேர்த்துள்ளது. 337 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான இலக்கை நிர்ணயிக்க போராடி வருகிறது.