அஜய் கிருஷ்ணாவின் சிறப்பான பந்துவீச்சு!! 12 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி!!
நேற்று அதாவது ஜூன் 26ம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேற்று(ஜூன்26) சேலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சீசம் மதுரை பேந்தர்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய மதுரை அணியில் 18 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் களமிறங்கிய ஸ்வப்னில் சிங் 11 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். எஸ் ஸ்ரீ அபிசேக்குடன் ஜோடி சேர்ந்த வாசிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். எஸ் ஸ்ரீ அபிசேக் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வாசிங்கடன் சுந்தர் அரைசதம் அடித்து 30 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார்.
கடைசியாக களமிறங்கிய சரவணன் 22 ரன்கள் சேர்க்க மதுரை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் சேர்த்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் பந்துவீச்சில் எம் சிலம்பரசன், அபராஜித் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஆர் ரோஹித், ராஹில் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
148 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சண்டோஸ் சிவ் 28 ரன்களும், ஜெகதீசன் 35 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் களமிறங்கிய பாபா அபராஜித் ஒரு புறம் நிலைத்து நின்று ரன் சேர்க்க தொடங்கினார்.ஆனால் மறுபறம் ஆடிய பேட்ஸ்மேன்கள் மதுரை பேந்தர்ஸ் அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஆட்டத்தின் 19வது ஓவர் வரை தாக்கு பிடித்து சேப்பாக் அணியின் வெற்றிக்காக போராடிய பாபா அபராஜித் 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 20வது ஓவரின் முதல் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.கடைசி ஓவரில் வெற்றி பெறுவதற்கு 20வது ஓவரின் கடைசி 5 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியால் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தோல்வியை தழுவியது.
மதுரை பேந்தர்ஸ் அணியில் பந்துவீச்சில் 3 ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து அஜய் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முருகன் அஷ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.சிறப்பாக பந்து வீசிய அஜய் கிருஷ்ணா ஆட்டநாயகன் விருதை வென்றார்.