Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தோனியின் இடத்தை நிரப்புகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர் ? பலமாகும் நடுவரிசை !

தோனியின் இடத்தை நிரப்புகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர் ? பலமாகும் நடுவரிசை !

இந்திய அணியின் இளம்வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து சிறப்பாக ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கும் திறனை வளர்த்துக் கொண்டு வருகிறார்.

இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பின் வரிசையில் களமிறங்கி 29 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்த ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணியாக அமைந்தது.

தோனிக்குப் பிறகு இந்திய அணி ஒரு தரமான பினிஷிங் வீரருக்காக காத்திருக்கிறது. அதற்காக ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை பரிசோதித்து வருகிறது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினாலும் அவரிடம் தொடர்ச்சியாக ரன் சேமிக்கும் திறன் குறைவாக உள்ளது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு விளையாண்டு வருகிறார்.

ஒருநாள் போட்டிகள் மற்றும் டி 20 போட்டிகள் என அனைத்திலும் தன்னை நிரூபித்துக் கொண்டு இருக்கிறார். விராட் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோர் சொதப்பும் போட்டிகளில் ஸ்ரேயாஸ் கலக்கி வருகிறார். இதன் மூலம் தோனியின் இடத்தை நிரப்புகிறார் என ரசிகர்கள் பாராட்ட ஆரம்பித்துள்ளனர். அதை உண்மை என நிரூபிக்கும் வகையில் இன்றைய போட்டியை தோனி ஸ்டைலில் சிக்ஸர் அடித்து முடித்தார் ஸ்ரேயாஸ்.

இதுவரை மொத்தமே 32 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும் ஸ்ரேயாஸை ஜாம்பவான் தோனியுடன் ஒப்பிடுவது ஏற்க முடியாதது என்றாலும் ஸ்ரேயாஸிடம் தோனியாகும் எல்லாத் தகுதிகளும் இருக்கிறது என்றால் அது மிகையில்லை. எப்படியோ இந்தியாவின் பின் வரிசை பலமானால் போதும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

Exit mobile version