இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை அடைந்திருக்கிறது. நியூசிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட்டை இழந்து நான்கு ரன்கள் எடுத்து இருக்கிறது. அந்த அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் நகரில் இருக்கின்ற கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்தார்.
அதன் பிறகு தன்னுடைய முதல் இன்னிங்சை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது, அடுத்ததாக 49 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. இந்திய அணி 3-வது நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்களை சேர்த்து ஒட்டுமொத்தமாக 63 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.
நேற்றையதினம் 4-வது நாள் ஆட்ட நேர ஆரம்பத்திலிருந்தே இந்திய அணி தடுமாற்றத்துடன் விளையாடியது, முன்வரிசை பேட்ஸ்மேன்கள் ஆன புஜாரா, மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள். ஆனாலும் பின்வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர், விருத்திமான் சஹா, உள்ளிட்டோரின் அரைசதங்கள் மற்றும் அஸ்வின், அக்சர் பட்டேல் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது.
கடைசி கட்டத்தில் இந்திய அணி 81 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்து 283 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், டிக்ளேர் செய்தது. அதன்பிறகு 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 4-வது நாள் ஆட்ட நேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்பை அடுத்து நான்கு ரன்கள் எடுத்து இருக்கிறது, அந்த அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது.
இன்றைய தினம் கடைசி நாள் ஆட்டம் நடைபெற இருக்கிறது ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால், அடுத்தடுத்து நியூசிலாந்து அணியை சார்ந்தவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.