கில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!!
ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்11) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 128 ரன்களுக்கு சுருட்டி இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி மோதிய ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் மூன்றாவது போட்டி கடந்த செப்டம்பர் 10ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரிசர்வ் நாளுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து நேற்று(செப்டம்பர்11) நடைபெற்ற போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். விராட் கோலி சதம் அடித்து 122 ரன்களும், கே.எல் ராகுல் சதம் அடித்து 111 ரன்களும் சேர்த்தனர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் அரைசதம் அடித்து 58 ரன்களும் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து 56 ரன்களும் சேர்த்தனர்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது. இந்திய அணியில் விழுந்த இரண்டு விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணியில் ஷாகின் அப்ரிடி மற்றும் சதாப் கான் ஆகிய இருவரும் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியில் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடத் தொடங்கும் நேரத்தில் முக்கியமான விக்கெட்டுகளான பாபர் அசம், முகமது ரிஷ்வான், பக்கர் ஜமான், இமாம் உல் ஹக் ஆகியோரின் விக்கெட்டுகளை ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், பும்ரா, ஷர்தல் தக்கூர் ஆகியோர் எடுத்தனர்.
இதையடுத்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் அடுத்தடுக்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. மேலும் பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா, ஹாரிஸ் ராவுப் ஆகியோர் வலி காரணமாக பேட்டிங்க் வரவில்லை.
இதனால் 32 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக பக்கர் ஜமான் 27 ரன்களும், இப்டிகர் அஹமது 23 ரன்களும், அகா சல்மான் 23 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் அவர்கள் 8 ஓவர்களை வீசி 25 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஷர்தல் தக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியில் அதிரடியாக விளையாடி சதம் அடித்து 122 ரன்கள் சேர்த்த விராட் கோஹ்லி அவர்கள் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ஆசியக் கோப்பை தொடரில் இன்று(செப்டம்பர்12) நடைபெறும் சூப்பர் 4 சுற்றின் 4வது போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி இலங்கையில் உள்ள கொழும்பு மைதானத்தில் இன்று(செப்டம்பர்12) மதியம் 3.30 மணிக்கு தொடங்குகின்றது.