ஷாகீன் அப்ரிடியின் சிறப்பான பந்து வீச்சு! 204 ரன்களுக்கு சுருண்ட வங்க தேசம்!!
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி அவர்களின் சிறப்பான பந்துவீச்சால் வங்கதேச அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்துள்ளது.
நடப்பு உலகக் கோப்பை தொடரின் 31 வது லீக் போட்டியில் வங்கதேசம் அணியும் பாகிஸ்தான் அணியும் இன்று(அக்டேபர் 31) விளையாடி வருகின்றது. கொல்கத்தா ஈடன் கர்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்க தேசம் அணி 23 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன் மஹமுதுல்லா தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அவர்களுடன் சேர்ந்து பொறுமையாக விளையாடத் தொடங்கினார்.
23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய வங்கதேச அணியை மஹமுதுல்லா மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் இணைந்து 102 ரன்களுக்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லிட்டன் தாஸ் ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய மஹமுதுல்லா அரைசதம் அடித்து 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ஷாகிப் அல்ஹசன் மட்டும் இறுதிவரை விளையாடி 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேச அணி 45.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்கள் சேர்த்தது.
பாகிஸ்தான் அணியில் ஷாகீன் அப்ரிடி 10 ஓவர்கள் வீசி 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மற்றொரு பந்துவீச்சாளர் முஹம்மது வாசிம் ஜூனியர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹாரிஸ் ராப் 2 விக்கெட்டுகளையும் இப்டிகர் அஹமத், உஷ்மா மிர் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தற்பொழுது 205 ரன்கள் என்ற எளிமையான இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகின்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை பெறுவதற்கு ஒரு படி முன்னேறும்.