கொட்டித் தீர்த்த கனமழை!! பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு!!
நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழையானது நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை தீவிரமாக பாதித்துள்ளது.
இந்தியாவில் டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் முதலிய மாநிலங்களின் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
இதனைத்தொடர்ந்து டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு சனிக்கிழமை அன்று மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள செய்தியில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, எந்த ஒரு முன்னேச்சரிக்கையும் இல்லாமல், 153 மி.மீ. அளவு மழை பதிவாகி உள்ளது.
இதனால் டெல்லியில் வசிப்போருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுப்போன்ற மழைப்பொழிவு 1982 ஆம் ஆண்டு ஜூலைக்கு பிறகு இப்பொழுது தான் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே நகரில் இருக்கக்கூடிய கார்யூக் பகுதியில் மிக கனமழை பெய்து வருகிறது.
இங்கு நேற்று மாலையில் பொழிந்த கனமழையால் 450 ஆண்டுகால பழமையான கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதனுடன் சில வீடுகள் பாதிப்படைந்து உள்ளது.
இந்த நிலையில், மழை மற்றும் நிலச்சரிவின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டு நாட்களில் மட்டும் 37 ஆக பதிவாகி உள்ளது.
இமாசல பிரதேசத்தில் உள்ள மண்டி, கிண்ணார் மற்றும் லஹால்-ஸ்பிடி போன்ற பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் சிவப்பு, ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள யமுனா நதியில் அபாய அளவை தாண்டி நீர்மட்டம் 206.24 மீட்டராக உயர்ந்துள்ளது என்று மத்திய நீர்வள ஆணையம் கூறி உள்ளது.
பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் பெய்த கனமழையால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பஞ்சாப் அரசு வருகின்ற 13 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.
இந்த கனமழையால் வீடுகள், கட்டிடங்கள், கார்கள் முதலியவை அடித்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளிவந்துக்கொண்டு இருக்கிறது.
எனவே, மக்கள் அனைவரும் முன்னேச்சரிக்கையாக இருக்குமாறு அரசால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.