Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சச்சின் லாராவுக்கு கவுரவம்! ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

#image_title

சச்சின் லாராவுக்கு கவுரவம்! ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஆகியோரின் பல மகத்தான சாதனைகளை போற்றி அவர்களை  கவுரவப்படுத்தி உள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு நுழைவு வாயிலுக்கு அவர்களது பெயரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று சூட்டியது. இந்த நுழைவு வாயில் வழியாக தான் வெளிநாட்டு அணி வீரர்கள் மைதானத்துக்குள் நுழைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அங்கீகாரம் குறித்து சச்சின் தெண்டுல்கர் தனது கருத்தினை தெரிவிக்கையில், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் வெளிநாட்டு அணி வீரர்கள் செல்லும் நுழைவு வாயிலுக்கு எனது பெயரையும், எனது நண்பர் லாராவின் பெயரையும் சூட்டி இருப்பது மிகப்பெரிய கவுரவமாக உள்ளது.
இதற்காக சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகத்தினருக்கும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கும் நன்றி. விரைவில் சிட்னி மைதானத்துக்கு செல்வதை எதிர்நோக்குகிறேன் என்றார். இதேபோல் லாராவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்து இருக்கிறார்.
தெண்டுல்கர் சிட்னி மைதானத்தில் 5 டெஸ்ட் போட்டியில் ஆடி 3 சதம் உள்பட 785 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2004-ம் ஆண்டு ஆட்டம் இழக்காமல் 241 ரன்கள் எடுத்ததும் அடங்கும். இந்தியாவுக்கு வெளியே தனது பிடித்தமான கிரிக்கெட் மைதானம் சிட்னி தான் என்று தெண்டுல்கர் அடிக்கடி கூறுவது உண்டு.
இதேபோல் பிரையன் லாரா இங்கு 4 டெஸ்ட் போட்டியில் விளையாடி 384 ரன்கள் எடுத்துள்ளார். 1993-ம் ஆண்டு அவர் இந்த மைதானத்தில் 277 ரன்கள் குவித்து இருந்தார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கருக்கு நேற்று 50-வது பிறந்த நாளாகும். லாரா தனது முதல் டெஸ்ட் சதத்தை சிட்னியில் அடித்து 30 ஆண்டுகள் ஆகிறது. இந்த இரண்டையும் ஒன்றாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவு கூறும் விதத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவர்களை கவுரவித்து இருக்கிறது.
Exit mobile version