Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தோனிக்கு தூதுவனாக செயல்பட்டேன் – மனம் திறந்த விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டனாக புகழாரம் சூட்டப்பட்டவர் கேப்டன் தோனி. இவரை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனாக உள்ளவர் விராட் கோலி. இருவருக்கு இடையே மிகப்பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. எவ்வளவு நெருக்கடியான சூழ்நிலையாக இருந்தாலும் தோனி மிகவும் சாந்தமாக இருப்பவர். ஆனால் கோலி இதற்கு அப்படியே நேர்மாறாக உள்ளவர்.

குணத்தில் வேறுவிதமாக இருந்தாலும், தோனிக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் அனைத்து விதமான திறமையையும் கொண்டவர் கோலி. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுடன் நேரலையில் பேசினார். அப்போது விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதற்கு, தோனி மிகப்பெரிய பங்கு வகித்ததாக தெரிவித்தார்.

இதுகுறித்து கோலி கூறுகையில், “ இந்திய கிரிக்கெட் அணியில் நான் பங்கேற்ற முதல் நாள் முதலே, கிரிக்கெட்டின் உள்ள நுணுக்கமான விஷயங்களை நான் கற்றுக்கொள்ள விரும்பினேன். அதனால் களத்தில் தோனிக்கு தூதுவனாக செயல்பட்டு வந்தேன். அதே போல எனது யோசனைகளையும் அவரிடம் தொடர்ந்து தெரிவித்துக்கொண்டே இருப்பேன். அதில் பல விஷயங்களை தோனியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதே நேரம் தொடர்ந்து அவர் என்னை கண்காணித்துக்கொண்டே இருப்பார். நான் பல விஷயங்களையும் அவரிடம் இருந்து கற்றுக்கொண்டே இருந்தேன். எனது யோசனைகள் பிடித்திருந்தால் அதை தொடர்ந்து என்னிடம் வெளிப்படையாகவே தோனி ஆலோசனை செய்வார். இந்த நடவடிக்கைகள் தான், அவருக்கு பின் இந்திய அணியை வழிநடத்த நான் சரியான ஆள் என்ற உணர்வை அவருக்கு அளித்துள்ளது.

தேர்வுக்குழுவினர் என்னை திடீரென கேப்டனாக்குவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு கிடைத்ததில் தோனியின் பங்கு என்பது மிகப்பெரியது” என்றார்.

Exit mobile version