ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு!
இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டன.
எஞ்சிய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டனர். இதையடுத்து ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்தது. ஏலத்தில் பங்கேற்க 1000க்கும் மேற்பட்ட வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதிலிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 600 வீரர்கள் ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் ஏலம் விடப்பட்டனர். ஏலம் விடப்பட்ட 600 வீரர்களில் மொத்தம் 204 பேர் விற்கப்பட்டனர்.
கொரோனா பரவலின் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடத்தப்பட்டது. அதன்பின், கடந்த வருடம் 2021 ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இதனிடையே போட்டியின் பாதியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் மீதி போட்டிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளை ஒரே இடத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி மும்பை மற்றும் புனேவில் உள்ள ஐந்து மைதானங்களில் லீக் போட்டிகளையும், அதனை தொடர்ந்து ப்ளே-ஆப் மற்றும் இறுதி போட்டிகளை அகமதாபாத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.