Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியா தென்னாப்பிரிக்கா t20 கிரிகெட் குறுக்கிட்ட மழை! கோப்பையை பகிர்ந்து கொண்ட அணிகள்!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க அணியும் அடுத்த 2 ஆட்டங்களில் இந்தியாவும் வெற்றி பெற்றதன் காரணமாக, தொடர் 2-2 என சமநிலையில் இருந்தது.

இந்தநிலையில், தொடர் யார் பக்கம் செல்லும் என்பதை நிர்ணயம் செய்யும் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்றிரவு நடைபெறுவதாக இருந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆட்டம் துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக மைதானத்தில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக, மைதான பொறுப்பாளர்கள் ஆடுகளத்தை மழைநீர் நினைக்காமல் இருக்க தார்ப்பாய் வைத்து மூடி வைத்தார்கள். அதன் பிறகு சில நிமிடங்கள் வெளுத்து வாங்கிய கனமழை காரணமாக, ஒட்டுமொத்த மைதானமும் குளம் அளவுக்கு மழை நீர் தேங்கியது.

அதன் பிறகு மழை நின்றவுடன் அந்த தண்ணீரை விரைவாக வெளியேற்றும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து திட்டமிட்டதை விட 50 நிமிடங்கள் தாமதமாக ஆட்டம் ஆரம்பம் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. அதோடு ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 19 ஓவர்கள் மட்டுமே ஆட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

போட்டியை ஆரம்பித்தவுடன் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய இஷான் கிஷன் முதல் ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டார். அதன் பிறகு நேகிதி பந்துவீச்சில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து ருதுராஜ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் களத்தில் இருக்கும் போது மறுபடியும் மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக, ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது இந்திய அணி 3.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் ஆட்டத்தை ஐந்து ஓவர்களாக குறைத்து விளையாட நடுவர்கள் தரப்பு முடிவு செய்தது. ஆனாலும் முன்பை போல் அல்லாமல் மழை சற்று அதிகமாக பெய்ய தொடங்கியது.

இதனை தொடர்ந்து ஆட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

இந்தியா ஆட்டத்தை வென்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்தனர்.

பந்துவீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மகாராஜ் இருவரும் கோப்பைக்கு ஒன்றாக போஸ் கொடுத்தனர்.

Exit mobile version