8 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வொயிட் வாஷ்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்?

0
135

8 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வொயிட் வாஷ்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்?

இந்திய அணி டெஸ்ட் தொடரில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வொயிட் வாஷ் அவமானத்தை சந்தித்துள்ளது.

நியுசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 5 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதன் பின் நடந்த ஒருநாள் தொடரை நியுசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை நியுசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

நியுசிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரைஸ்ட்சர்ச் மைதானத்தில் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியுசிலாந்து கேப்டன் வில்லியம்சன முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 242 ரன்களை சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய நியுசிலாந்து பூம்ரா மற்றும் ஷமியின் அபார பந்துவீச்சால் 235 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இந்தியா 7 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் விளையாடி விக்கெட்களைத் தாரை வார்த்தனர். மூன்றாம் நாள் ஆட்டமுடிவில் 90 ரன்களை சேர்த்து 6 விக்கெட்களை இழந்துள்ளனர். இதையடுத்து இன்று மீண்டும் களமிறங்கிய இந்தியா மேற்கொண்டு வெறும் 34 ரன்களே சேர்த்து 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியுசிலாந்து அணிக்கு 132 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இதன் பின்னர் களமிறங்கிய நியுசிலாந்து அணி இலக்கை எளிதாக எட்டியது. 3 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்களை சேர்த்து இந்தியாவை டெஸ்ட் தொடரிலும் வொயிட்வாஷ் செய்தது. கடைசியாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 2011-2012 ஆம் ஆண்டில் 0-4 என்ற கணக்கில் அனைத்து போட்டிகளையும் தோற்று வொயிட்வாஷ் ஆனது. அதன் பின்னர் 8 ஆண்டுகள் கழித்து இந்த அவமானகரமான தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இந்த தோல்விகளால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தனது முதல் இடத்தை இன்னும் இழக்கவில்லை.

இந்திய அணி 7 வெற்றி, 2 தோல்வி, 360 புள்ளிகள் முதல் இடத்திலும் ஆஸ்திரேலியா 296 புள்ளியுடன் 2-வது இடத்திலும், நியூசிலாந்து 180 புள்ளியுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 146 புள்ளியுடன் 4-வது இடத்திலும் பாகிஸ்தான் 140 புள்ளியுடன் 5-வது இடத்திலும் உள்ளன. அதற்கடுத்த இடங்களில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வஙகதேசம் ஆகிய அணிகள் உள்ளன.