அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20… போட்டியை வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா!!

0
107

 

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20… போட்டியை வென்று தொடரை கைப்பற்றிய இந்தியா…

 

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

 

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டி20 போட்டியை வென்ற இந்தியா 1-0 என்று முன்னிலையில் இருந்தது. இதையடுத்து நேற்று(ஆகஸ்ட்20) இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

 

இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது.

 

இந்திய அணியில் அதிகபட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட் அரைசதம் அடித்து 58 ரன்கள் சேர்த்தார். சஞ்சு சாம்சன் 40 ரன்களும் சர்வதேச அணியில் முதல் போட்டியில் அறிமுகமாகி விளையாடிய ரிங்கு சிங் 38 ரன்களும் சேர்த்தனர். ஷிவம் தூபே 22 ரன்கள் சேர்த்தார். அயர்லாந்து அணியில் பேரி மெக்கார்த்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிராய்க் யங்க், பெஞ்சமின் வைட், மார்க் அடயர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து 186 ரன்களை இலக்காகக் கொண்டு அயர்லாந்து அணி களமிறங்கியது. அயர்லாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஆண்ட்ரூ பால்பிர்னி கடைசி வரை அயர்லாந்து வெற்றிக்காக போராடினார். ஒரு புறம் ஆண்ட்ரூ பால்பிர்னி ரன்களை சேர்க்க மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருந்தது. ஆண்ட்ரூ பால்பிர்னி அவர்களுடன் இணைந்து ஒருவரும் சிறப்பாக விளையாடவில்லை.

 

அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங்க், லோர்கன் டக்கர் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமலும், ஹேரி டெக்டர் 7 ரன்களிலும், கர்டிஸ் கேம்பர் 18 ரன்களிலும், ஜார்ஜ் டாக்ரெல் 13 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஆண்ட்ரூ பால்பிர்னி அரைசதம் அடித்து 72 ரன்கள் சேர்த்தார். தொடர்ந்து விளையாடிய ஆண்ட்ரூ பால்பிர்னி 16வது ஓவரில் ஆட்டமிழக்க அதன் பின்னர் களமிறங்கிய மார்க் அடயர் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிளந்தனர்.

 

அடுத்து வந்த வீரர்கள் சிறப்பாக விளையாடத் தவறியதால் அயர்லாந்து அணாயால் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் தான் எடுத்தது. இந்திய அணியில் பந்துவீச்சில் பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அர்ஷதீப் சிங் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று கைப்பற்றியுள்ளது. ஆட்டநாயகன் விருதை இந்திய அணியில் அறிமுகமாகி முதல் போட்டியில் 38 ரன்கள் எடுத்த ரிங்கு சிங் அவர்களுக்கு வழங்கப்பட்டது.