Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மழையால் சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்… வொயிட் வாஷ் செய்த இந்தியா!

மழையால் சதத்தை தவறவிட்ட சுப்மன் கில்… வொயிட் வாஷ் செய்த இந்தியா!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித்தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்ல, இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த போது அக்ஸர் படேலின் அதிரடி அரைசதத்தால் இந்திய அணி த்ரில் வெற்றியைப் பெற்று தொடரைக் கைப்பற்றியது. அவர் 35 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதன் மூலம் இந்திய 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

இதையடுத்து நேற்று கடைசி போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டு 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் 36 ஓவர்களில் இந்திய அணி பேட்டிங்கை முடித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் தனது முதல் சதத்தை அடிக்க இருந்த சுப்மன் கில் 98 ரன்களில் அந்த வாய்ப்பை இழந்தார். இந்தியா 3 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 136 ரன்கள் மட்டுமே சேர்த்தது.  டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி 119 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Exit mobile version