டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டி! போராடியும் தோல்வி பெற்றது பஞ்சாப் கிங்ஸ்!
நேற்று அதாவது மே17ம் தேதி நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
நேற்று தர்மசாலாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இருவரும் டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய பிரித்வி ஷா அரைசதம் அடித்து 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ரேலி ரூசோ அதிரடியாக விளையாட தொடங்கினார். அதிரடியாக அரைசதம் அடித்து 37 பந்துகளில் 6 சிக்ஸ் 6 பவண்டரிகள் அடித்து 82 ரன்கள் சேர்த்தார். பிலிப் சால்ட் 26 ரன்கள் சேர்க்க 20 ஓவர்களின் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் சாம் கரண் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
214 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் ரன் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய அதர்வா டய்ட் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து 55 ரன்கள் சேர்த்து வலி காரணமாக ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். ஒரு பக்கம் லிவிங்ஸ்டன் அதிரடியாக விளையாட மறு பக்கம் பஞ்சாப் அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் அரைசதம் அடித்து 94 ரன்களுக்கு ஆட்டத்தின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் இஷாந்த் ஷர்மா, ஆன்ரிச் நோர்க்கியா இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி எட்டாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள ஒரு போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி பொறுத்தே பஞ்சாப் அணியின் பிளே ஆப் வாய்ப்பு இருக்கும். டெல்லி அணி கடைசி இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு முன்னேறுள்ளது.