ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டது!
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கொரோனா பரவல் காரணமாக சில கட்டுபாடுகளுடன் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த முறை ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக இரு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெகா ஏலத்தில் 600 வீரர்கள் ஏலம் விடப்பட்டு அதில், 204 பேர் விற்கப்பட்டனர்.
கொரோனா பரவலின் காரணமாக கடந்த அண்டு ஐபிஎல் போட்டிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இந்தியாவில் நடைபெற்று வந்தது. இருப்பினும் போட்டியின் பாதியில் சில வீரர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீதி போட்டிகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இதற்குமுன்பு கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் கொரோனா பரவலின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இந்த முறை ஐபிஎல் போட்டிகளை எப்படியாவது இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் பட்டேல், இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மார்ச் 26ம் தேதி சனிக்கிழமை தொடங்கும் என அறிவித்துள்ளார். இதனிடையே, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் மும்பை மற்றும் புனேவில் நடத்த திட்டமிட்டுள்ளது.
பிளே-ஆப் சுற்று ஆட்டங்களை பொறுத்தவரை அந்த போட்டிகள் நடைபெறும் மைதானங்கள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே போல் இறுதிப் போட்டிகளை அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து போட்டியை காண நாற்பது சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.