அசால்ட்டாக 6 விக்கெட்டுகளை எடுத்த ஜெப்ரே வன்டர்சே! இந்தியாவை வீழ்த்திய இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ஜெப்ரே வன்டர்சே அவர்கள் 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலமாக இலங்கை அணி இரண்டாவது ஒருநாள் போட்டியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடி வரும் ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி இலங்கையில் நேற்று(ஆகஸ்ட்4) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்தது. இலங்கையில் அதிகபட்சமாக அவிஷ்கா பெர்னான்டோ மற்றும் கமிந்து மென்டிஸ் ஆகியோர் தலா 40 ரன்கள் சேர்த்தனர். துணித் வெல்லலகே 39 ரன்களும், குஷால் மெண்டிஸ் 30 ரன்களும், அசலன்கா 25 ரன்களும் சேர்த்தனர்.
இந்திய அணியில் பந்து வீச்சில் சிறப்பாக பந்து வீசிய வாஷிங்க்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல், முகமது சிராஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய அணிக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
241 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்கள் சுப்மான் கில் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார்கள். ரோஹித் சர்மா அரைசதம் அடித்து 64 ரன்களிலும் சுப்மான் கில் 35 ரன்களிலும் ஆட்டமிழக்க இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழத் தொடங்கியது.
விராட் கோஹ்லி 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க மறுபுறம் பொறுமையாக விளையாடத் தொடங்கிய அக்சர் பட்டேல் நிதானமாக ரன் சேர்க்க தொடங்கினார். ஒருபுறம் இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ஜெப்ரே வன்டர்சே அவர்கள் சிறப்பாக பந்துவீசி அடுத்தடுத்து இந்திய அணியின் விக்கெட்டுகளை எடுக்கத் தொடங்கினார்.
44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அக்சர் பட்டேலின் விக்கெட்டை அசலன்கா கைப்பற்ற இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இதையடுத்து இந்திய அணி 42.2 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இலங்கை அணி இரண்டாவது ஒருநாள் போட்டியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜெப்ரே வன்டர்சே அவர்களுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டியை இலங்கை அணி வென்றதன் மூலமாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இலங்கை மற்றும் இந்தியா மோதிய முதல் ஒருநாள் போட்டி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.