Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இங்கிலாந்து மண்ணில் கேஎல் ராகுலின் அதிரடி சதம்! கலக்கத்தில் மூத்த வீரர்கள்!

இங்கிலாந்து நாட்டின் கவுண்டி அணிக்கு எதிரான போட்டியில் கே எல் ராகுல் அடித்த சதம் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் குழப்பத்தை உண்டாக்கி இருக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை அடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கிறது.5 போட்டிகள் கொண்ட இந்த தொடர் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

முக்கியமான போட்டிகளுக்கு முன்னதாக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் விளையாடுவது வழக்கம். இருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக முதல்தர பயிற்சி போட்டியில் விளையாடாமல் இருந்ததை இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக, கருதப்படுகிறது. ஆகவே இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அந்த நாட்டின் கவுண்டி அணிகளுடன் பயிற்சி போட்டிகளுக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்திருக்கிறது.

அதன்படி இரண்டு அணிகளுக்கும் இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று ஆரம்பமானது. மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டிகள் துர்காம் நகரத்தில் இருக்கின்ற எமிரேட்ஸ் ரிவர் சைட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. விராட்கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டாலும் ரோகித்சர்மா அணியின் தலைவராக செயல்பட்டார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் புகுந்த ரோகித் சர்மா 9 ரன்களிலும், மயங்க் அகர்வால் 28 ரன்களில் பெரிய அளவில் ரன் சேர்க்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 21 ரன்கள் எடுத்தார், அதேபோல் விஹாரியும் 24 ரன்களில் ஆட்டம் இழந்தார் . அதன்பின்னர் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல், ரவீந்தர் ஜடேஜா உள்ளிட்ட இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை எடுக்க தொடங்கினார்கள். சிறப்பாக ஆடிய ராகுல் சதம் அடித்து அசத்தினார். 150 பந்துகளை எதிர்கொண்ட அவர் 107 ரன்கள் எடுத்து ரிட்டையர்ட் அவுட்டானார்.

இன்னொருபுறம் தொடர்ச்சியாக விளையாடிய ஜடேஜா 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த ஷர்துல் தாகூர், அக்ஷர் பட்டேல், உள்ளிட்ட மிகச் சிறப்பாக விளையாடவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தநிலையில், பும்ரா 3 ரன்களுடனும் சிராஜ் ஒரு ரன்களுடனும் களத்தில் இருந்தார்கள். கடைசியில் முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 306 ரன்கள் சேர்த்திருக்கிறது.

தற்சமயம் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த் நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் திரும்பாததால் கேஎல் ராகுல் தான் நிச்சயமாக விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை ரிஷப் திரும்பி விட்டாலும் அணியில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் மூத்த வீரர் புஜாராவுக்கு பதிலாக ராகுல் களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version