ஆஸ்திரேலியாவும் எனக்கு ஹோம் கிரவுண்ட்தான்… சச்சினின் சாதனையை முறியடித்த ரன் மெஷின்!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் அதிக ரன்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 2022 டி20 உலகக் கோப்பையில் தனது மூன்றாவது அரை சதத்தை (நான்கு இன்னிங்ஸ்களில்) நேற்று பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தார். அடிலெய்டு ஓவலில் புதன்கிழமை (நவம்பர் 2) நடந்த பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறை) இந்தியா தோற்கடித்ததால், கோஹ்லி ‘ஆட்டநாயகன்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் பேட்டிங் செய்த இந்தியா 184 ரன்களை குவிக்க, கோஹ்லி 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தனது சிறப்பான அரைசதத்தின் போது, கோஹ்லி டி20 உலகக் கோப்பை போட்டியில் இலங்கையின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தனவை விஞ்சி அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதே போல மற்றொரு சாதனையாக அவுஸ்திரேலியாவில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி கோஹ்லி சாதனை படைத்தார்.
அடிலெய்டில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்த கோஹ்லி, ஆஸ்திரேலியாவில் இதுவரை 68 இன்னிங்ஸ்களில் 3,350 ரன்கள் எடுத்துள்ளார். டெண்டுல்கர் 3,300 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவில் டெண்டுல்கர் 84 இன்னிங்ஸ்களில் 3,300 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியர் அல்லாத ஒரு கிரிக்கெட் வீரர் சேர்த்த அதிக ரன்கள் இவையாகும்.