மீண்டும் பந்துவீச்சில் கலக்கிய குல்தீப் யாதவ்!!! தோல்வி அடைய வேண்டிய போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!!
இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப்டம்பர்12) நடைபெற்ற போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அவர்களின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்திய அணி நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சுப்பர் சுற்றின் 4வது போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா நிதானமாக விளையாடத் தொடங்கினார். மற்றொரு தொடக்க வீரர் 19 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா அவர்கள் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்து 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த ரோஹித் சர்மா அவர்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லி அவர்கள் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன், கே.எல் ராகுல் இணை நிதானமாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினர். கே.எல் ராகுல் 39 ரன்களும், இஷான் கிஷன் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய அக்சர் பட்டேல் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணாயின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் சிறப்பாக பந்துவீசிய இளம் பந்துவீச்சாளர் துனித் வெல்லாழகே அவர்கள் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அசலங்கா அவர்களும் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்ற மகீஷ் தீக்சனா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசன்கா 6 ரன்களுக்கும் திமுத் கருணரத்னே 2 ரன்களுக்கும், குசால் மென்டிஸ் 15 ரன்ஙளுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 25 ரன்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளே இழந்து தள்ளாடியது.
அதன் பிறகு களமிறங்கிய தனஞ்செய டிசில்வா நிதானமாக விளையாடி ரன் சேர்க்கத் தொடங்கினார். மறுபுறம் சதீரா சமரவிக்ரமா 17 ரன்களிலும், சரித் அசலன்கா 22 ரன்களிலும், தசன் சானகா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் தனஞ்செய டிசில்வாவுடன் ஜோடி சேர்ந்த துனித் வெல்லாழகே இலங்கை அணியை சரிவில் இருந்து மீட்டு வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
இருந்தும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கை அணி 41.3 ஓவர்களின் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இலங்கை அணியின் வெற்றிக்காக போராடிய டிசில்வா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க கடைசி வரை விளையாடிய துனித் வெல்லாழகே 42 ரன்கள் எடுத்து கடைசி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 41 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவீந்திர ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
சூப்பர் 4 சுற்றில் இந்தியா விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்த வங்கதேச அணி தொடரை விட்டு வெளியேறியுள்ளது.