தமிழகத்தில் மிகப்பெரிய பார்க்கிங் வசதி!! மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!
சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்து முடிந்தது. இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க சில தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.
இதில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களான, சென்னை மாநகராட்சி சார்பில் ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம், ராமசாமி சாலை வணிக வளாகம், கோடம்பாக்கம் மண்டல அலுவலகம், தியாகராய டாக்டர் சாலை பழைய வணிக வளாகம் போன்ற இடங்களில் ரூபாய் 162 கோடி செலவில் வாகனம் நிறுத்தும் மையங்கள் அமைக்கப்பட தமிழக அரசிடம் அனுமதி கேட்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது
இது மட்டுமல்லாமல், பிராட்வே பேருந்து நிலையத்தை பல்வேறு வணிக வளாகத்துடன் கூடிய போக்குவரத்து முனையமாக மாற்ற மற்றும் சென்னை மாநகராட்சியின் 53 அம்மா குடிநீர் நிலையங்களை சென்னை குடிநீர் வாரியத்திடம் வழங்கவும், மேலும் மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை ஒப்பந்த ஆசிரியர்களை கொண்டு பணி நியமனம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளை கல்விச் சுற்றுலாவிற்காக ஆவின், எண்ணூர் துறைமுகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், பெரியார் அறிவியல், தொழில்நுட்ப மையம், போக்குவரத்து பூங்கா, ஹுண்டாய் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு கூட்டிச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ தேர்வுகளில் வெற்றி அடைந்து, தேசிய முக்கியத்துவம் நிறைந்த அரசு கல்வி நிறுவனங்களில் சேரும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு முதல் ஆண்டு கல்வி கட்டணத்தை செலுத்தவும், மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறவைக்கும் ஆசிரியர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அந்த ஆசிரியர்களுக்கு வழ்கங்கப்படும் ஊக்கத்தொகை ரூ1500 லிருந்து தற்போது ரூ.3 ஆயிரம் கூடுதலாக வழங்க மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுக்கு சிலை அமைக்கவும் மற்றும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுக்கு சிலை அமைக்கவும் தடை இல்லை என்ற சான்றுகள் வழங்க மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.