மதுபான சந்து கடைகள் மற்றும் லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்பனை!! விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்!!
நாமக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் மதுபான சந்து கடைகள் ,லாட்டரி சீட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை அதிகம் செய்யப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் ச.உமா அவர்களின் தலைமையில் விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கடந்த கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டத்து.
பெறப்பட்ட அனைத்து மனுவிற்கும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்பொழுது அரசு மதுபான கடைகளுக்கு அருகில் சந்து கடைகள் இருப்பதாக அதிக அளவில் புகார்கள் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜூ இது குறித்து வழக்கு போடப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இதற்கு மட்டும் 300 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வழக்கு பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் மொத்தம் இது தொடர்புடைய 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவற்றின் மூலம் இப்பொழுது சந்து கடைகள் எதுவும் இல்லை என்று காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர.ஈஸ்வரன் அவற்றிற்கு மறுப்பு தெரிவித்தார். விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர் பேசுகையில் காவல்துறை கூறியது போன்று சந்து கடைகள் எதுவும் மூடப்படவில்லை அதற்கு மாறாக அது அதிகரித்த வண்ணமே உள்ளது மற்றும் அதிக அளவில் லாட்டரி சீட்டுகளும் விற்கப்படுகின்றது என்று அவர் கூறினார்.
மேலும் கூட்டத்தில் உள்ள விவசாயிகளும் புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றது என்று தெரிவித்தனர் . இது குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் தங்களை மிரட்டுவதாகவும் அவர்கள் கூறினர்.
மேலும் நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சியர் ச.உமா அவர்கள் உடனடியாக விவசாயிகளின் குறைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்று காவல் துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.