‘மன்கட்’ முறை அவுட்! வரவேற்றுள்ள அஸ்வின்!!

0
137

‘மன்கட்’ முறை அவுட்! வரவேற்றுள்ள அஸ்வின்!!

கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்போது உள்ள கிரிக்கெட் விதிமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது எம்.சி.சி எனப்படும் மெல்போர்ன் கிரிக்கெட் கிளப். கிரிக்கெட் விதிமுறைகளில் இந்த அமைப்பு கொண்டு வந்த மாற்றத்திற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒப்புதல் அளித்தது.

அந்த அமைப்பு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளில் முக்கியமாக, ‘மன்கட்’ முறையில் ஒரு வீரர் அவுட் செய்யப்பட்டால் அது அதிகாரப்பூர்வ அவுட்டாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டது. அதாவது, எதிர்முனையில், உள்ள பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்பாகவே கிரீசை விட்டு வெளியேறினால் பவுலரால் ரன்-அவுட் செய்யப்படுவார்.

இவ்வாறு செய்யப்படும் இந்த ‘மன்கட்’ அவுட் உண்மையான விளையாட்டிற்கு எதிரானது என விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளின்படி, இவ்வாறு ‘மன்கட்’ முறையில் செய்யப்படும் அவுட் அதிகாரப்பூர்வ ரன்-அவுட்டாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கிரிக்கெட் விதிமுறைகளில் கொண்டுவந்துள்ள இந்த புதிய மாற்றத்திற்கு சச்சின் டெண்டுல்கர் உள்பட கிரிக்கெட் வீரர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் ‘மன்கட்’ முறையில் செய்யப்படும் அவுட்டை அதிகாரப்பூர்வ ரன்-அவுட்டாக அறிவித்ததை வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பவுலிங் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்னதாக கிரீசை விட்டு நகர்ந்தால் தயக்கமின்றி ‘ரன்-அவுட்’ செய்ய வேண்டும் என்பதே எனது கருத்தாகும் என தெரிவித்து அதனை வரவேற்றுள்ளார்.

முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய அஸ்வின் பந்து வீசுகையில் அப்போது பவுலிங் முனையில் இருந்த ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர் கிரீசை விட்டு வெளியே நிற்கும்போது அஸ்வின் அவரை ‘மன்கட்’ முறையில் அவுட் செய்தார். அதன்பின் அது கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.